Last Updated : 11 Oct, 2014 10:24 AM

 

Published : 11 Oct 2014 10:24 AM
Last Updated : 11 Oct 2014 10:24 AM

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரிய மனு திரும்பப் பெறப்பட்டது: அதிமுகவினரின் அழுத்தம் காரணம்

கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெய லலிதாவை உடனடியாக தமிழக சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை திடீரென திரும்பப் பெறப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான‌ ஜெயலலிதா கடந்த 27-ம் தேதி பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுநல மனு

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த சத்யநாராயணா என்பவர் கடந்த வியாழக்கிழமை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,‘‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மட்டுமே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு இருக்கிறது. தீர்ப்பளித்து தண்டிக்கும் அதிகாரம் இல்லை. இதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம், நீதிபதி டி'குன்ஹாவிற்கு வழங்கவில்லை.

மேலும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 417-ன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மாநில‌த்தில்தான் குற்றவாளியை சிறையில் அடைக்க வேண்டும். ஆதலால் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்து பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைத்தது சட்டப்படி தவறு. எனவே, அவரை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப் பட்டுள்ள விவகாரம் தமிழர்களிடையே உணர்வு ரீதியான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே பகைமை உணர்வு ஏற்படுகிறது. தமிழகத் தில்தொடர் போராட்டங்களும் தற்கொலைகளும் நடந்து வருகின்றன. எனவே, ஜெயலலிதாவுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்''என்றும் கூறப்பட் டிருந்தது.

திடீர் வாபஸ்

இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சத்ய நாராயணா நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. அவரது சார்பாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா பேசும்போது,‘‘இந்த மனுவின் நோக்கம் என்ன? இதனை எப்படி பொதுநல மனுவாக கருதமுடியும்?''என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ‘‘ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அவரது மேல் முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆதலால் இந்த மனுவை நாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டு, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம்'' எனக் கூறி மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

அதிமுகவினரின் அழுத்தம்

சத்யநாராயணா தாக்கல் செய்த மனுவை திடீரென திரும்ப பெற்றுக் கொண்டதற்கான காரணம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரித்தபோது:

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கி இருக்கிறது. அதே போல கர்நாடக உயர் நீதிமன்றமும் அவர்களது ஜாமீன் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதனால் தங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பான உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக் கிறார்கள். இந்நிலையில் இது போன்ற தேவையற்ற மனுக்கள் தாக்கல் செய்தால் ஜாமீன் மனுவுக்கு சிக்கலாக மாறிவிடும்.

எனவே நீதிமன்றத்துக்கு வந்த அதிமுகவை சேர்ந்த வழக்கறி ஞர்கள் சிலர் மனுதாரர் சத்யநாராய ணாவிடம், ‘மனுவை திரும்பப் பெறு மாறு'அழுத்தம் கொடுத்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்தே மனு திடீரென திரும்பப் பெறப்பட்டது.ஒருவேளை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா முன்னிலையில் விசாரணை நடைபெற்றிருந்தால், கண்டனமும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x