Published : 20 Oct 2014 14:53 pm

Updated : 21 Oct 2014 12:42 pm

 

Published : 20 Oct 2014 02:53 PM
Last Updated : 21 Oct 2014 12:42 PM

மாஜிக் மன்னன் டைனமோ!

இரவு நேரம். கங்கை நதியில் ஏற்றிய விளக்குகள் மிதந்து செல்வதைப் பார்த்தபடி கரையில் அமர்ந்திருக்கிறார்கள் மக்கள். திடீரென்று ஓர் உருவம் வந்து, தன்னைக் கவனிக்கச் சொல்கிறது. அடுத்த சில நொடிகளில் கங்கை முழுவதும் தீபங்கள் ஒளி வீசியபடி மிதந்து செல்கின்றன! நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலேயே அசரடித்த மேஜிக் கலைஞர் டைனமோவின் அதிரடிகள் ஹிஸ்ட்ரி டிவியில் ஒளிபரப்பாகின்றன. இந்தியாவில் முதல்முறையாக டைனமோ நிகழ்த்திய புதிய சாதனை இது!

நம்மில் ஒருவர்


ஒல்லியான உருவம். நீல நிறக் கண்கள். பழுப்பு முடி. சாதாரண உடை. தலையில் தொப்பியோ, கையில் கோலோ கிடையாது. மேஜிக் கலைஞர்களுக்கே உரிய வசீகரிக்க வைக்கும் பேச்சும் கிடையாது. நம்மில் ஒருவராக வலம் வரும் டைனமோவுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்!

அப்படி என்னதான் செய்கிறார்?

அறைக்குள் இருக்கும் ஒரு காகிதப் பட்டாம்பூச்சியை எடுத்து ஊதினால், அறை முழுக்க ஏராளமான பட்டாம்பூச்சிகள் தங்கள் சிறகுகளை அடித்துப் பறக்கின்றன! இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் நடந்துசெல்கிறார்! வாய் குறுகிய பாட்டிலுக்குள் செல்போனை வைத்துவிடுகிறார். ஓடிவரும் தண்ணீரை அப்படியே பனிக்கட்டியாக மாற்றிவிடுகிறார்.

இரண்டு மீன்கள் உள்ள வாளியைக் கவிழ்த்தால், நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. கைகளை நீட்டியபடி, அந்தரத்தில் நிற்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து எல்லோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒரு புத்தகத்தில் நாம் நினைக்கும் சில வார்த்தைகளை அப்படியே சொல்கிறார். சீட்டுக் கட்டுகளில் ஏராளமான வித்தைகளைச் செய்கிறார்…

தெருவுக்கு வந்த மேஜிக்

மற்றவர்களுக்கும் டைனமோவுக்கும் என்ன வித்தியாசம்?

பெரிய அரங்குகளில் நடத்தப்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர் டைனமோ. அதாவது அவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை; அவரே மக்களை நாடி வருவார்! அங்கே என்ன பொருள்கள் இருக்கின்றனவோ, அவற்றை வைத்தே மேஜிக் செய்துவிடுவார்! அவர் செய்த மேஜிக்கைப் பார்த்து, ஆச்சரியத்தில் உறைந்துபோயிருக்கும் சமயத்தில் அந்த இடத்தை விட்டு அமைதியாகக் கடந்துவிடுவார்.

அவர் சென்ற பிறகு, இது எப்படி, எப்படி என்று மக்கள் மூளையைக் கசக்கிக்கொள்வார்கள். உடலை இரண்டாக வெட்டுவது, தலை இல்லாமல் செய்வது போன்ற சற்றுக் கிலி ஏற்படுத்தும் மேஜிக் விஷயங்கள் இவரிடம் கிடையாது. எளிமையான விஷயங்களைக் கொண்டு அபாரமான மேஜிக் செய்வதுதான் டைனமோவின் சிறப்பு!

யார் இந்த டைனமோ?

32 வயதான டைனமோவின் இயற்பெயர் ஸ்டீவன் ஃப்ரேன். இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் சொந்த ஊர். டைனமோவின் அப்பா சிறையில் இருந்தார். அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் வசித்துவந்தார். சின்ன வயதிலிருந்தே டைனமோவுக்குச் செரிமானப் பிரச்சினை இருந்தது. அவரால் தேவையான அளவு சாப்பிட முடியாது. சாப்பிட்டால் வயிற்று வலியால் துடிக்க வேண்டியிருக்கும். இதனால் மற்ற குழந்தைகளைவிடக் குள்ளமாகவும் ஒல்லியாகவும் தோற்றமளிப்பார் டைனமோ. வீட்டில் பெரும்பாலும் தனிமையில் இருப்பார். வயிற்று வலி அடிக்கடி வந்து உயிரை வாங்கும். வெளியில் சென்றால், எல்லோரும் கிண்டல் செய்தே அவரை வதைப்பார்கள். ட்ரம்முக்குள் வைத்து, மலையிலிருந்து உருட்டி விட்டிருக்கிறார்கள். மிகக் கொடூரமான அனுபவமாக இப்பொழுதும் அதைச் சொல்கிறார் டைனமோ.

திருப்புமுனை

பிரச்சினைகளில் சிக்கியிருந்த டைனமோவை, மீட்க முடிவெடுத்தார் அவரது தாத்தா. மேஜிக் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார். முதலில் ஓர் ஆர்வத்தில் மேஜிக் கற்க ஆரம்பித்த டைனமோ, விரைவில் அதிலேயே மூழ்கிப்போனார்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, அவரது நோய், தனிமை, கிண்டல் போன்றவற்றை மறக்க வைக்கும் சக்தி இந்த மேஜிக்குக்கு இருந்தது! பள்ளியில் செய்து காட்டிய மேஜிக்குகளால் கிண்டல் குறைந்தது. அமெரிக்கா சென்றபோது, பாட்டி, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.

பல்வேறு மேஜிக் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்க ஆரம்பித்த டைனமோ, தன்னுடைய எதிர்காலம் மேஜிக்தான் என்பதை முடிவு செய்தவுடன், படிப்பை விட்டுவிட்டார்.

உருவானது எப்படி?

சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த டைனமோ, திடீரென்று ஒருநாள் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் இறந்து போனால், உலகம் தன்னை எவ்வாறு நினைவு வைத்துக்கொள்ளும் என்று யோசித்தார்.

உலகம் மறக்காத அளவுக்கு ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார். 6 மாதச் சிகிச்சைக்குப் பிறகு, திரும்பி வந்த டைனமோ, தன்னுடைய மேஜிக்குகளைத் தொகுத்து சிடியாக வெளியிட்டார். பலரது கவனத்தையும் அது ஈர்த்தது.

புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் ஹாரி ஹுடினியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் டைனமோவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த வித்தைகளைப் பார்த்த பார்வையாளர்கள், ‘டைனமோ’ என்று உற்சாகத்தில் கத்தினார்கள். ஸ்டீவன் டைனமோவாக மாறியது இந்த இடத்தில்தான்!

அரங்குகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த டைனமோவை வீதிகளில் நிகழ்த்த வைத்தவை டிவி ஷோக்கள்தான். நான்கு வருடங்களாக முக்கிய சானல்களில் டைனமோவின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.

ஒரு லட்சம் பார்வையாளர்களுடன் ஆரம்பித்த டைனமோவின் ஷோ, இன்று உலகம் முழுவதும் ஒரு கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது! மேஜிஷியன் இம்பாசிபிள் நிகழ்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் டைனமோ. டைனமோவின் எளிமையும் திறமையும் எல்லோரையும் ஈர்த்துவிடுகின்றன.

டைனமோவின் ரசிகர்கள்

வில் ஸ்மித், ரஸ்ஸல் பிராண்ட், ரிச்சர்ட் பிரான்சன், லிண்ட்சே லோஹன், இளவரசர் சார்லஸ், டேவிட் பெக்ஹாம் ஆகியோர் அவரின் ரசிகர்களில் சிலர்.

“நான் செய்யும் தந்திரங்கள் சாதாரணமானவைதான். அதை விளக்க ஆரம்பித்தால், ஒரு நிமிடம் கூட உங்களால் கேட்க முடியாது. மேஜிக்கை ரசியுங்கள்; அதற்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்!” என்கிறார் டைனமோ.

“எல்லோருக்கும் இனிமையான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. எனக்கும் குழந்தைப் பருவம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனக்குக் கிடைத்த மேஜிக் என்ற வாய்ப்பை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அதுதான் என் எதிர்காலம் என்று தீர்மானித்துக்கொண்டேன். பிறகு, அதில் வெற்றி பெற நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தேன். மற்றவர்களைவிட எந்த விதத்தில்

என்னை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கலாம் என்று யோசித்தேன். அவ்வளவுதான்! மற்றபடி நான் அசாத்தியமான காரியங்கள் செய்வதாக எப்பொழுதும் நினைத்ததில்லை. உழைப்பும் திறமையும் முயற்சியும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் உச்சத்தை அடைய முடியும்! இந்தச் சாதாரண ஸ்டீவன், டைனமோவாக மாறியது இப்படித்தான்!’’ என வெற்றிரகசியம் சொல்கிறார் இந்த மேஜிக் மன்னன்

டைனமோஸ்டீவன் ஃப்ரேன்இங்கிலாந்ரசிகர்கள்மாஜிக்

You May Like

More From This Category

More From this Author