Last Updated : 24 Sep, 2014 12:16 PM

 

Published : 24 Sep 2014 12:16 PM
Last Updated : 24 Sep 2014 12:16 PM

ஜப்பானில் குட்டிப் பொண்ணுங்க கொலு

இந்தியாவில் நவராத்திரி நாட்களில் கொலு வைப்பது உங்களுக்குத் தெரியுமில்லையா? ஜப்பானிலும்கூட கொலு வைக்கும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால், அங்கு மார்ச் 3-ம் தேதி கொண்டாடப்படுகிற இந்தப் பண்டிகைக்கு ‘ஹினா மட்சுரி’ என்று பெயர். இதைப் ‘பெண் குழந்தைகள் விழா’ என்றும் சொல்வார்கள்.

தங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக இந்த விழா ஜப்பானில் கொண்டாடப்படுகிறது. சிறுமிகள் தங்கள் தோழிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். அரிசியை நொதிக்க வைத்துப் பெறப்படுகிற பானம் விருந்தில் முக்கிய இடம்பிடிக்கும்.

அரிசி மாவில் செய்த கேக், சர்க்கரையும் சோயா சாஸும் கலந்து செய்த இனிப்பு, மீன், சர்க்கரை, வினிகர் இவை கலந்து செய்யப்பட்ட அரிசி உணவு ஆகியவையும் விருந்தில் பரிமாறப்படும்.

மிதக்கும் பொம்மைகள்

ஜப்பானை ஹேயான் வம்சத்தினர் ஆண்ட காலத்தில் (கி.மு 794 முதல் கி.மு 1185 வரை) கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் இருந்து இந்தப் பண்டிகை உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்தக் காலத்தில் ‘ஹினா’ எனப்படும் பொம்மைகளை வைக்கோலில் செய்வார்கள். இந்தப் பொம்மைகள் மனிதர்களிடம் இருக்கும் தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் என்று நம்பினார்கள்.

அதனால் அந்தப் பொம்மைகளைப் படகில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். பொம்மைகளை ஆற்றில் விடும் இந்தப் பண்டிகைக்கு அந்தக் காலத்தில் ‘ஹினா நகாஷி’ என்று பெயர்.

இப்படி தொடர்ந்து ஆறுகளில் விடப்படுகிற பொம்மைகள் மீனவர்களின் வலையில் சிக்கின. அவற்றை அப்புறப்படுத்துவது பெரிய வேலையாக இருந்தது.

சிலர் பொம்மைகளைச் சேகரித்து, கோயில்களுக்கு எடுத்து வந்து எரித்தனர். அதனால் காலப் போக்கில் பொம்மைகளை ஆற்றில் விடுவது கைவிடப்பட்டது. பொம்மைகளை வீட்டிலேயே படிகள் அமைத்து கொலுவாக வைத்தார்கள்.

அரச பொம்மைகள்

ஹினா மட்சுரி கொலு வைப்பதற்குப் பல விதிகள் உண்டு. படிகளை சிவப்பு நிற துணியால் அலங்கரிக்க வேண்டும். மேல் வரிசையில் ராஜா, ராணி பொம்மைகளை வைக்க வேண்டும்.

அந்தப் பொம்மைகளுக்கு ஹேயான் ராஜ குடும்ப முறைப்படி ஆடை அணிவித்து, அலங்காரம் செய்ய வேண்டும். அரசன் கையில் செங்கோலை வைத்திருப்பார். அரசியின் கையில் ஜப்பானிய முறைப்படி சின்ன விசிறி இருக்கும்.

தங்க நிறத்தால் ஆன திரைக்கு முன்னால் இந்தப் பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளின் பக்கத்தில் அலங்காரம் செய்யப்பட்ட விளக்கை வைக்க வேண்டும்.

அடுத்த வரிசையில் மூன்று அரசவைப் பெண்களின் பொம்மைகள் இருக்கும். அவற்றுக்கு நடுவே இனிப்பு வைப்பதற்கான ஸ்டாண்ட் இருக்கும்.

மூன்றாவது படியில் கையில் இசைக்கருவிகளுடன் ஐந்து இசைக் கலைஞர்களின் பொம்மைகள் இருக்கும். மூன்று வகை டிரம் வாசிப்பவர்கள், ஒரு புல்லாங்குழல் இசைப்பவர், ஒரு பாடகர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

நான்காவது வரிசையில் மந்திரி பொம்மைகள் இடம்பெறும். இடது புறம் இருக்கும் பொம்மைகளும் வலது புறம் இருக்கும் பொம்மைகளும் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்கும். பொம்மைகளின் கைகளில் வில்லும் அம்பும் இருக்கும்.

ஐந்தாவது வரிசையில் செடிகளுக்கு நடுவே பாதுகாவலர்கள் பொம்மைகள் இருக்கும். இந்தப் பொம்மைகள், அரச தம்பதியைப் பாதுகாக்கும் பொருட்டு வைக்கப்படுகின்றன.

ஆறு மற்றும் ஏழாவது படிகளில் பலவிதமான கருவிகளும், வண்டிகளும் வைக்கப்படும்.

சிறுவர்கள் விழா

ஜப்பானில் பிப்ரவரி மாதத்தில் பொம்மைகள் வைத்து, மார்ச் 3-ம் தேதி அவற்றை எடுத்துவிடுவார்கள். மார்ச் 4-ம் தேதிவரை பொம்மைகளை எடுக்காமல் இருந்தால் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் திருமணம் தாமதமாகும் என்று அங்கே நம்பப்படுகிறது.

மார்ச் 5-ம் தேதி ஜப்பானில் குழந்தைகள் தினமாகவும் சிறுவர்கள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் அன்று தேசிய விடுமுறையும்கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x