Last Updated : 27 Jun, 2014 11:11 AM

 

Published : 27 Jun 2014 11:11 AM
Last Updated : 27 Jun 2014 11:11 AM

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அபராதம்

போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அப்படியும் போக்குவரத்து விதிமீறல்கள் பல இடங்களிலும் நடக்கின்றன. சாலைகளில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால் என்ன தண்டனை என்பது குறித்து விளக்குகிறார் ஈரோடு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் எஸ். வேலுசாமி.

# வரி செலுத்தாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியுமா?

சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் வரி செலுத்தவேண்டும்; அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். வரி செலுத்தவில்லை என்றால், மோட்டார் வாகனச் சட்டம் 86 விதி 172 (1)ன் கீழ் அபராதம் விதிக்கலாம் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யலாம். இது வாகனத்துக்கு வாகனம் மாறுபடும்.

உதாரணமாக, சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரி செலுத்தவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தையும் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து 2 நாட்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாதபடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்படும்.

# அனுமதி (பர்மிட்) பெறாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்கலாமா? அப்படி இயக்கினால் என்ன தண்டனை?

பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 66 பிரிவு 192-ன் கீழ் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும்.

# சரக்கு போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் ஏற்றிச் செல்லலாமா?

வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகளை (ஓவர் லோடு) ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துகளை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனத் தணிக்கையின்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்கு ஏற்றிவந்தால் மோட்டார் வாகன சட்டம் 194 பிரிவு 113, 114-ன் கீழ் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்கை கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் அபராதம் விதிக்கப்படும். தவிர, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்குகளை இறக்கி வைத்துவிட்டு (அன் லோடு) செல்ல வேண்டும்.

# சரக்கு ஆட்டோ, லாரி போன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லலாமா?

சரக்கு வாகனங்களில் ஆட்களை கட்டாயம் ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்தை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் 177 விதி 236-ன் கீழ் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x