Published : 25 Apr 2014 11:05 am

Updated : 25 Apr 2014 12:20 pm

 

Published : 25 Apr 2014 11:05 AM
Last Updated : 25 Apr 2014 12:20 PM

திரையும் கதையும்: பழிவாங்கும் படங்களின் பரிணாமம்

பழிவாங்கும் கதைகளையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தமிழ் சினிமாவிலும் பழிவாங்கும் கதைகளுக்கு மவுசு குறையாமலே இருக்கின்றது. கணவனைத் தண்டித்த மன்னனை வீழச்செய்து மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றைப் பிரதிபலித்த பூம்புகார் வெளியான அறுபதுகளிலேயே பழிவாங்கும் படங்கள் துளிர்விடத் தொடங்கின.

எண்பதுகளில் ரஜினி, கமல் நடித்த நான் சிகப்பு மனிதன், எனக்குள் ஒருவன், மங்கம்மா சபதம், கல்யாணராமன், அபூர்வ சகோதரர்கள், நான் மகான் அல்ல, நீயா, பொல்லாதவன், குரு சிஷ்யன், மூன்று முகம், சிவா, மகாநதி, வெற்றி விழா, ஒரு கைதியின் டைரி இப்படிப் பல படங்கள் பழிவாங்கும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன.


இந்தச் சரித்திரம் கமல் ரஜினியோடு மட்டும் நின்று விடாமல், மோகன்- 24 மணி நேரம், விஜய்காந்த்-ஹானஸ்ட் ராஜ், பிரபு- சீதனம், சரத்குமார்- நம்ம அண்ணாச்சி, சத்யராஜ்- ஜீவா, வண்டிச்சோலை சின்னராசு, கார்த்திக்- காத்திருக்க நேரமில்லை, அர்ஜுன்- பிரதாப், அஜித்- வரலாறு, ஆழ்வார், விஜய் - ஆதி, மாதவன்-ரெண்டு, கார்த்தி- நான் மகான் அல்ல, சூர்யா- ரத்த சரித்திரம், விஷால்-பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்...

இப்படிப் பல நடிகர்களாலும் மணி ரத்தினம், பி.வாசு, பாலு மகேந்திரா, பாரதி ராஜா, கே.எஸ்.ரவிகுமார் போன்ற பல இயக்குநர்களாலும் இந்த விஷயம் கையாளப்பட்டது.

நாயகனின் பழிவாங்கும் நோக்கத்தில் மாறுபட்டு, தேவர் மகன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் வில்லன்களின் பழிவாங்கும் உணர்ச்சியைப் பதிவு செய்து விறுவிறுப்பைக் கூட்டின. நாயகன். ஈ’யாக மாறி வில்லனைப் பழிவாங்கும் ‘நான் ஈ’ இவற்றில் புது ரகம்தான்.

மனைவியோ, காதலியோ, தங்கையோ, அம்மாவோ வில்லன்களின் இச்சைக்கு இரையாகி இறக்க வேண்டும், இல்லை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் ஹீரோ கருவில் இருக்கும்போதோ, அல்லது குழந்தையாக இருக்கும்போதோ, அவரின் அப்பா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். நாயகன் பழிவாங்கும் கதைகள் பலவும் இவ்வட்டாரத்திற்குள்ளே விழுந்தன. நாயகி பழிவாங்கும் கதை என்று சொன்னாலே ஒன்று அவள் பாம்பாக இருக்க வேண்டும் இல்லை பேயாக இருக்க வேண்டும். இவை தான் தொண்ணூறுகள் வரை வெளிவந்த படங்களில் வழக்கமாகக் காணப்பட்ட டெம்ப்ளேட்.

சுப்ரமணியபுரம் பழிவாங்கும் கதைக்குப் புதிய வடிவத்தை அளித்தது. சுப்ரமணியபுரம் வெளிவரும்வரை இக்கதைகள் ஒரே வட்டத்தில் விழுந்த போதும் பல படங்கள் வெற்றி பெற்றன. மங்கம்மா சபதம், அபூர்வ சகோதரர்கள் இரண்டுமே தந்தையைக் கொன்ற வில்லனைப் பழிவாங்கும் நாயகனின் கதைகள்தான். ஆனால் அபூர்வ சகோதரர்கள் அமோக வெற்றி. மங்கம்மா சபதமோ தோல்வி. காரணம் என்ன?

மங்கம்மாவின் மகன் அசோக் வலியவன் சண்டைபோடக் கற்றுக் கொண்டு சிறு வயதிலிருந்தே வஞ்சத்துடன் வளர்கிறான். அசோக் எப்படியும் வில்லனைச் சாய்த்திடுவான் என்று படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அதனால் இக்கதையில் சுவாரசியம் குறைவு. ஆனால் அப்பு அப்படியல்ல. உடல் ஊனமுற்ற ஒருவன், தன் காதலி மணமுடிக்கும் சோகத்தில், தன் அம்மாவே தன்னை ஏளனமாகப் பார்ப்பதாக எண்ணி உயிர் துறக்கப் பார்க்கிறான். ‘குள்ளமா பிறந்தது என் தப்பாம்மா? நீங்ககூட எனக்குக் குறை இருக்குன்னு சொல்லிட்டீங்களே?’ என்று அழும் மகனிடம்- இது உன் தப்பு இல்லடா, நிறைமாதமா இருந்த என்னை விஷம் குடிக்க வெச்ச அந்தப் பாவிகளோட தப்பு’ என்று பிளாஷ்-பேக் கதையைக் கூறுகிறாள். அப்போது கண்ணீர் சிந்திய அப்புவின் கண்களில் வஞ்சம் பிறக்கிறது. இடைவேளை வருகையில் திடகாத்திரமான தந்தையை வீழ்த்திய வில்லன்களை, ஒரு பொடியன் எப்படி வீழ்த்தப் போகிறான் என்ற கேள்வியும் திரையில் வைக்கப்படுகிறது. கதையின் இந்த முடிச்சினால்தான் அபூர்வ சகோதரர்கள் வெற்றி பெற்றது. அப்பு கதாபாத்திரம் சாதாரண மனிதனாக அமைத்திருந்தால் இப்படம் அந்த அளவு ஈர்த்திருக்காது.

இப்படிப்பட்ட நாயகனால் எப்படிப் பழிவாங்க முடியும்? இது சாத்தியம்தானா என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் உருவாக வேண்டும். அப்படி உருவாகிவிட்டால் அது வெற்றிகரமான திரைக்கதை மட்டுமல்ல, வெற்றிபெறும் திரைக்கதையும் கூட.

‘பாண்டிய நாடு’ பார்க்கும் பொழுது இடைவேளை வரை நாயகனின் கதை சொல்லப்பட்டு வில்லனின் செயலால் அவன் குடும்பம் சிதைவதைக் கண்டு வெகுண்டெழுகிறோம். இனி இடைவேளைக்குப் பிறகு பயந்த சுபாவம் கொண்ட நாயகனின் வேட்டை எப்படி அரங்கேறுகிறது என்ற படபடப்பில்தான் படத்தின் வெற்றி அமைந்திருந்தது. பழிவாங்கும் உணர்வு அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. ஆனால் யாரால் எப்படி அது அரங்கேறுகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமைகிறது. நியாயமான கோபம், கடக்க முடியாத தடைகள், போராடி வெற்றி. இந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தினால் பழிவாங்கும் படம் போட்ட முதலீட்டைப் பலி வாங்காது.

திரைப்படங்கள்பழிவாங்கும் படங்கள்சுப்ரமணியபுரம்பாண்டிய நாடு

You May Like

More From This Category

More From this Author