Published : 15 Feb 2015 10:56 AM
Last Updated : 15 Feb 2015 10:56 AM

ஒருபக்கம் எதிர்ப்பு; மறுபக்கம் ஆதரவு: சென்னையில் களைகட்டிய காதலர் தின விழா

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காதலர் தினத்தை ஆதரிக்கும் அமைப்புகள் காதலர்களுக்கு லட்டு கொடுத்தும், அதை எதிர்க்கும் அமைப்புகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தின.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலகெங்கும் உள்ள காதலர்கள் நேற்றைய தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் பூங்காக்கள், கடற்கரை, மால்கள் போன்ற பொது இடங்களில் காதல் ஜோடிகள் அதிகளவில் கூடினர்.

காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் காதலர் தின ஆதரவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

அதேபோல் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் மதம் மற்றும் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கலந்து கொண்டார்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானவர்கள் புளியந்தோப்பு பகுதியில் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர். இதில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை புளியந்தோப்பு காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

ஆர்.கே.நகர் பகுதியில் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை சூளை, ஓட்டேரி, கோயம்பேடு, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் சிலர், காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக கடைபிடித்து பெண்களின் கைகளில் கயிறுகளை கட்டினர்.

இதுகுறித்து பாரத் இந்து முன்னணியின் தலைவர் பிரபு கூறும்போது, “நாங்கள் காதலுக்கும் காதலர்களுக்கும் எதிரிகள் அல்ல. காதல் என்ற பெயரில் அட்டூழியம் செய்பவர்களைத்தான் எதிர்க்கிறோம். காதலர்கள் என்று கூறி பப், விருந்து என கும்மாளம் அடிப்பதைத்தான் கண்டிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x