Published : 22 Jan 2015 10:19 am

Updated : 22 Jan 2015 10:19 am

 

Published : 22 Jan 2015 10:19 AM
Last Updated : 22 Jan 2015 10:19 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 6

6

பிரெஞ்சு சரித்திரத்தில் அடுத்த முக்கியக் கட்டம் மன்னன் பதினாறாம் லூயியின் ஆட்சி. அப்போது பிரான்ஸ் கடுமையான பொருளாதாரச் சிக்கலை சந்தித்தது. நாட்டின் அதீத வரிகளை பொது மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். அதுவும் பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய வரி சதவிகிதம் குறைவு என்கிற விதத்தில் வரி விகிதங்கள் அமைந்திருந்தால் எதிர்ப்பு வராதா என்ன?

போதாக்குறைக்கு அமெரிக்க புரட்சியில் வேறு தங்கள் மூக்கை பிரான்ஸ் நுழைக்க, இதனாலும் நிறைய பொருள் செலவு. பிரான்ஸ் மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகிதம்தான் பிரபுக்கள். என்றாலும் அவர்கள் கூறியதே சட்டமாக இருந்தது. இதனாலும் மக்களுக்கு வெறுப்பு.

பாரீஸில் சுதந்திர தாகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மன்னனின் அனுமதியில்லா மலேயே பிரான்ஸில் தேசியக் குழு அமைக்கப்பட்டது. அதன் அரசியல் விவாதங்கள் பொது மக்களை அடைந்தன. அரசியல் விழிப்புணர்வு அதிகமானது.

மக்கள் ஆங்காங்கே கூட்ட மாகக் கூடி ஆட்சியை அலசினர். அப்படியொரு மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த ராணுவத் தலைமை முயற்சித்தது. ஆனால் சிப்பாய்கள் அப்படிச் செய்ய மறுத்து விட்டனர். மறுத்த வர்களை சிறைகளில் அடைத்தது அரசு. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று `முடிவெடுத்தது’ தேசியக் குழு. ஆனால் தொடர்ந்து அவர்கள் சிறையிலேயே வைக்கப் பட்டிருந்தனர்.

மக்களின் மனப்போக்குக்கு மதிப்பளிக்காமல் பிரபுக்களின் எண்ணப்படி மட்டுமே செயல் பட்டார் மன்னன் பதினாறாம் லூயி. பிரபுக்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் மிக முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. இதை விட முக்கியமாக பிரெஞ்ச் மக்களை எரிச்சல்பட வைத்தது வேறொரு விஷயம். அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஒரே அமைச்சரான ஜேக்வெஸ் நெக்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மக் களுக்கு அச்சமும் வந்தது. தேசியக் குழுவையே வன்முறையால் கலைத்து விடுவார்களோ?

மக்கள் மீண்டும் கூடிக்கூடிப் பேசினார்கள். “தேசியவாதத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணிதான் நெக்கரின் பதவி நீக்கம்’’ என்ற பேச்சு பரவலானது. “சுவிஸ் மற்றும் ஜெர்மன் பிரிவு ராணுவங் களைக் கொண்டு நம்மை யெல்லாம் படுகொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது. நமக்கு ஒரே வழி ஆயுதம் ஏந்துவதுதான்’’ என்றெல்லாம் பிரச்சாரம் நடத்தப் பட்டது. மன்னனுக்கு எதிரான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

தவிர எங்கெல்லாம் உணவுப் பொருள்களும், துப்பாக்கிகளும் அரசால் பதுக்கி வைக்கப்பட்டிருக் கிறது என்று நம்பினார்களோ அங்கெல்லாம் திரண்டு சென்று அவற்றை அதிரடியாகக் கைப் பற்றும் வழக்கத்தை மக்கள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

இவ்வளவு குழப்பங்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புரட்சியில் பாரீஸ் பற்றி எரியத் தொடங்கியது. ராணுவத்தில் ஒரு பகுதியினரே மக்களோடு சேர்ந்து கொண்டனர்.

தங்களுக்கு எதிராக புதிய ராணுவப் படைகள் திரட்டப்படுவதாகக் கேள்விப்பட்டதும் மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். மக்களைக் கொல்வதற்கு அரசு திட்டமிடுவதா!

பாஸ்டில் (Bastille) என்ற பகுதியில் ஒரு பெரும் சிறை இருந்தது. ஆனால் அப்போது அதில் கைதிகள் யாரும் இல்லை. இந்த சிறைச்சாலையில் ராணுவம் சுமார் 14,000 கிலோ கன்பவுடர் சேமித்து வைத்திருப்பதாக மக்களுக்குத் தகவல் வந்தது. பொதுமக்கள் அந்தச் சிறைச்சாலையை 1789 ஜூலை 14 அன்று சூழ்ந்தார்கள்.

சூழ்ந்த மக்கள் சுமார் ஆயிரம் பேர். இவர்களை சமாளிக்க அங்கு அனுப்பப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையும் ஆயிரம்!.

‘‘சிறைச்சாலையை எங்களிடம் ஒப்படை. துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் இங்கிருந்து நீக்கி கடலில் வீசு’’ என்ற கோஷங் கள் எழுந்தன. எதிர்ப்பு அதிகரிக்க, பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றது ஒருவழியாக அரசு தரப்பு. ஆனால் இரண்டுபேரை மட்டுமே சிறை வளாகத்துக்குள் அனுமதிப் போம் என்றும் கூறியது. இரண்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே சென்றார்கள். பேச்சுவார்த்தை முடிவடைவதாகத் தெரியவில்லை. மக்கள் பொறுமை இழந்தனர்.

மதியம் ஒன்றரை மணிக்கு சிறைச் சலையின் உள் ஒட்டு மொத்தமாக நுழையத் தொடங்கினார்கள். துப்பாக்கிகள் முழங்கின. பொது மக்களில் 98 பேர் இறந்தனர். இருதரப்பிலும் பாதிப்புகள் ஏராளம். ராணுவ அதிகாரி ஒருவரை மக்கள் தெருத்தெருவாக இழுத்துச் சென்று கொன்றனர். மன்னரின் ராணுவம் நினைத்திருந்தால் இறப்புகள் நேராமல் தடுத்திருக்க முடியும் என்ற பேச்சு பரவலானது.

இதில் வேடிக்கை என்னவென் றால் இதெல்லாம் மன்னருக்கு அடுத்த நாள்தான் தெரிவிக்கப் பட்டதாம். “இது என்ன எதிர்ப்பா?’’ என்று சாவகாசமாகக் கேட்டான் மன்னன் பதினாறாம் லூயி.

அது வெறும் எதிர்ப்பு அல்ல புரட்சி என்பது சீக்கிரமே தெரியத் தொடங்கியது.

மக்கள் தங்கள்மீது மீண்டும் ராணுவம் ஏவிவிடப்படலாம் என்று தயார் நிலையில் மேலும் ஆக்ரோஷமாக குவியத் தொடங்கினர். ஒருவழியாக ராணுவம் பின்னடைந்தது. நெக்கரை மீண்டும் பதவியில் அமர்த்துவதாக மன்னன் அறிவித்தான். “தேசம் நீண்ட காலம் வாழ்க” என்று குரல் கொடுத்தார்கள் மக்கள்.

பிரபுக்களுக்கு இதற்குப் பிறகு கலவரம் ஏற்பட்டது. மன்னன், மக்கள் இருதரப்புமே தங்களைக் கைவிட்டதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

பாரீஸில் கிடைத்த இந்த மக்கள் வெற்றி பிரான்ஸ் முழுவதும் பரவியது. ஆங்காங்கே மக்கள் குழுக்கள் நிறையத் தோன்றின. கிராமங்களில் ஜமீன்தார்கள் தாக்கப்பட்டார்கள். தங்கள் புரட்சிகளை அவர்கள்தான் நசுக்குவார்கள் என்ற பயம்.

பிரெஞ்சுப் புரட்சி ஆரவாரமாகத் தொடங்கியது.

(இன்னும் வரும்)

பாரீஸ்வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்பிரான்ஸ்

You May Like

More From This Category

More From this Author