Published : 30 Sep 2014 12:40 pm

Updated : 30 Sep 2014 18:17 pm

 

Published : 30 Sep 2014 12:40 PM
Last Updated : 30 Sep 2014 06:17 PM

ஆளுக்கொரு திசையில் இழுக்கும் தேர்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், தமிழக முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்ற களேபரங்களில் ஒரேயடியாக அமுங்கிவிட்டது மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல். அங்கு இருபெரும் கூட்டணிப் பிளவுகள் நிகழ்ந்திருக்கின்றன.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.), காங்கிரஸ் கட்சி இணைந்து மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்துவந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் இவ்விரு கட்சிகளும் சேர்ந்தே பதவிகளைப் பங்கிட்டுக்கொண்டன. மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் பெருந்தோல்வி கிடைத்ததையடுத்து, சட்டப் பேரவை பொதுத்தேர்தலிலும் அதே முடிவுதான் கிடைக்கும் என்பதை இரு கட்சிகளுமே புரிந்துகொண்டன. எனவே, கூட்டணியை உடைத்துக்கொள்ள விரும்பியே, இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டின. காங்கிரஸ் வேறு வழியில்லாமல் தன்னுடைய மிரட்டலுக்குப் பணிந்தாலும் பணியக் கூடும் என்று தேசியவாத காங்கிரஸ் எதிர் பார்த்தது.


ஒருமித்த முடிவும் எட்டப்படாததால், தேசியவாத காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதும், யாரும் கேட்காமலேயே அரசின் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார் முதலமைச்சர் பிருதிவி ராஜ் சவாண்.

அதேபோல, இந்துத்துவாவுக்காக ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் போல மக்களவைத் தேர்தலில் மாய்ந்து மாய்ந்து ஒற்றுமை காட்டின பாஜகவும் சிவசேனையும். ஆனால், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுமென்றே பேச்சு வார்த்தையை இழுத்து, எதிர்த் தரப்பு ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்து, கூட்டணியை முறித்துக்கொண்டனர். 151 தொகுதிகளில் போட்டி, முதல்வர் பதவி தங்களுக்கே என்ற கடும் நிபந்தனைகளை சிவசேனை விதித்தது.

பாஜக தேசியத் தலைவர் மும்பை வந்தால், முதலில் உத்தவ் தாக்கரேயைக் கண்டு ஆசி வாங்கிக்கொண்டுதான் போக வேண்டும் என்றும் சிவசேனை எதிர்பார்த்தது. கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் பிரதமர் நரேந்திர மோடியைக் கிண்டல் செய்வது, விமர்சனம் செய்வது என்று சிவசேனை செயல்பட்டது, பாஜகவினருக்கு அதிருப்தி யளித்ததில் ஆச்சரியமில்லை. முடிவில் கூட்டணி பிளவுபட்டது.

இப்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாரதிய ஜனதா, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை என்று 5 முனைப் போட்டியாக மாறிவிட்டது. இதில் உதிரிக் கட்சிகளுக்குத்தான் யோகம். கேட்டதற்கும் மேலே தொகுதிகள் நிச்சயம் ‘சல்லிசாக’க் கிடைக்கும்.

சுயேச்சையாக வெற்றிபெறும் உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மகா ரோஷம் காரணமாக 2 கூட்டணிகள் உடைந் ததற்காக யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. காரணம் இது பணம், பதவிக்கான போட்டி என்று எல்லோருக்கும் தெரியும்.

‘ஆட்சி நமக்கில்லை!’ என்று காங்கிரஸ் நகர்ந்து விட்டது. தேர்தலுக்குப் பிறகு, சிவசேனை அல்லது தேசியவாத காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதே லட்சியம் என்றிருக்கின்றன தேசியவாத காங் கிரஸும் சிவசேனையும். என்னதான் வியூகங்கள் வகுத்தாலும், இறுதியில் இந்தக் கட்சிகளின் தலைவிதியை முடிவுசெய்யப் போவது மகாராஷ்டிரத்தின் மக்கள்தான்!

சொத்துக்குவிப்பு வழக்குமகாராஷ்டிராசட்டப் பேரவைப் பொதுத்தேர்தல்பிருதிவி ராஜ் சவாண்

You May Like

More From This Category

More From this Author