Published : 15 Sep 2014 10:56 AM
Last Updated : 15 Sep 2014 10:56 AM

களைகட்ட தொடங்கிய 2-வது சீசன்: கொடைக்கானலில் குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் மிதமான வெயில், இதமான சாரல் மழையுடன் 2-வது சீசன் (ஆஃப் சீசன்) களைகட்ட தொடங்கியதால், கேரளா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரத் தொடங்கி உள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. காணும் இடமெல்லாம் பசும் சோலையும், ரம்மியமான மலைகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, கோடைகால சீசன் நடந்து முடிந்துள்ளது. தற்போது செப்டம்பர் 1-ம் தேதி முதல் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ளது.

அக்டோபர், நவம்பர் வரை நடக்கும், இந்த சீசனில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் படகு சவாரி, பிரையன்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, வெண் பஞ்சு மேகங்கள் தொட்டு விளையாடும் தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, அதிகாலையில் வீசும் குளிர்ந்த காற்று, பன்னீர் துளி தெளித்ததுபோல சாரல் மழை, பனி மூட்டம் நிறைந்த குளுகுளு சீசனை அனுபவிக்க கேரளா, வெளிநாடுகளைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலைகளில் குதிரைச்சவாரி செய்து உற்சாகத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

பிரையன்ட் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட 2 லட்சம் செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த சீசனில் பகலில் வெயிலும், மழையும் குறைவாகவே இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஓரளவு மழை பெய்தததால், இந்த ஆண்டு 2வது சீசன் களைகட்டியுள்ளது. வெளிநாடுகளில் தற்போது உறைபனியும், மழையும் பெய்வதால் அந்நாட்டினர் தற்போது கொடைக்கானல் வரத் தொடங்கி உள்ளனர். அவர்கள், கொடைக்கானல், வட்டகானல் பகுதியில் வாரக்கணக்கில் வீடுகள், லாட்ஜ்களில் தங்கி, குளுகுளு சீசனை அனுபவிக்கின்றனர். தற்போது காலாண்டுத் தேர்வு நடக்க உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சீசனில் தற்போது வரை கல்வி சுற்றுலா வரவில்லை.

வெளிநாட்டினர் வருகை 60 சதவீதம் வீழ்ச்சி

இதுகுறித்து கொடைக்கானல் சமூக ஆர்வலர் வீரா ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘பொதுவாக 2-வது சீசனில் வடமாநிலங்கள், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற நாட்டினர் மட்டுமே இந்த சீசனை அனுபவிக்க வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 60 சதவீதம் வெளிநாட்டினர் வருகை குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கொடைக்கானலில் தண்ணீர் பிரச்சினையால் வெளிநாட்டினர் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

வெளிநாட்டினர் பட்ஜெட் கணக்குடன்தான் சுற்றுலா வருகின்றனர். கொடைக்கானல் தண்ணீர் பிரச்சினை, லாட்ஜ், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் அவர்களின் பட்ஜெட் கணக்கில் கொடைக்கானல் வந்து செல்ல முடியவில்லை. புதுச்சேரி, ஆரோவில், கோவா, கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கொடைக்கானலைவிட சுற்றுலா பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளதால், வெளிநாட்டினர் தற்போது அங்கு செல்லத் தொடங்கி விட்டனர். வெளிநாட்டினர் வருகையை அதிகரிக்க, கொடைக்கானலில் தண்ணீர் பிரச்சினை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x