Published : 04 Mar 2014 00:00 am

Updated : 04 Mar 2014 08:27 am

 

Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 08:27 AM

காங்கிரஸ் ஆட்சியை தூக்கு எறிய வேண்டும்: ஜெயலலிதா பிரச்சார துளிகள்

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, ‘மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை தொடங் கினார். தேரடித் திடலில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வர் பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947-ல் மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வுதான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னா பின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும். எதிர் காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமையவிடக்கூடாது என்ற மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல. மக்களாட் சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்தியாவில் நடந்துகொண்டி ருக்கிற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன்மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்களை துன்புறுத்துவதையும் சிறை பிடிப்பதையும் அவர்களது படகுகள் மற்றும் வலைகளை கைப்பற்றுவதையும் இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டி ருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.

விலையில்லா அரிசி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி விஷம் போல் ஏறி வந்தாலும், அதிலிருந்து சாமானிய மக்களைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50-க்கும் வழங்கப்படுகின்றன.

காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதா பிரச்சார துளிகள்:

*முதல்வர் ஜெயலலிதா திங்கள் கிழமை காஞ்சிபுரத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேலை அறிமுகப்படுத்தி தனது முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

*முதல்வரின் பிரச்சாரத்தை யொட்டி காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவித்தன . 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் சிறிது சிரமமப்பட்டனர். சில மாணவர்களை பெற்றோரே வாகனத்தில் அழைத்து வந்தனர். சரியான திட்டமிடல் இல்லாத நிலையில் இந்த நிலை ஏற்பட்டதாகவும் இனி இதுபோல நடக்காது என்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறினர். தேர்வு சமயத்தில் மட்டும் பிரச்சார ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டன. வாகனப் பிரச்சாரத்துக்கும் தடை விதிக் கப்பட்டது.

*பிரச்சார கூட்ட நுழைவு வாயிலும் பிரச்சார மேடையும் நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு மாலை 4.45 மணிக்கு வந்த முதல்வர் 5.40 மணி வரை உரையாற்றினார்.

*முதல்வர் வருகையையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத் துக்கு வெளியே 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் ஷேர் ஆட்டோக்களின் புழக்கம் அதிகமாக காணப்பட்டது.

*பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த சோதனைக்கு பிறகே தொண்டர்கள் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

*அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, டி.கே.எம்.சின்னையா, மாநிலங்களவை உறுப்பினரும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளருமான வா.மைத்ரேயன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலர் பா.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மக்களவைத் தேர்தல்காஞ்சிபுரம்ஜெயலலிதா பிரச்சாரம்

You May Like

More From This Category

More From this Author