Published : 24 Feb 2014 05:44 PM
Last Updated : 24 Feb 2014 05:44 PM

ஏழு பேர் விடுதலை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: ஜெயலலிதா

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை சென்னையில் இன்று வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணம் தொடர்பான விவரத்தையும் வெளியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பிறகு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இடதுசாரிகள் தவிர வேறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் வர வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு, "எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும்" என்றார்.

தமது பிரச்சாரத்தின் மையக்கருத்து குறித்து முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும்போது, "எங்களது தாரக மந்திரமான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவையே முக்கிய குறிக்கோள். இவை தவிர, தேர்தல் அறிக்கையில் எங்கள் பிரசார நோக்கங்கள் பற்றி விரிவாக சொல்வோம்" என்று கூறினார்.

பிறந்தநாள் செய்தி பற்றி கேட்டதற்கு, "அமைதி, வளம், வளர்ச்சி காண தமிழக மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் எங்களது தாரக மந்திரத்திற்கு ஒத்துழைப்பு கோருகிறேன்" என்றார்.

தேர்தல் வியூகம் குறித்தும், அதிமுக சார்பில் பிரதமர் பதவிக்கு தாம் முன்னிருத்தப்படுவது குறித்தும் கேட்டபோது, "எனது கவனம் தமிழகத்தில்தான் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது குறிக்கோள்" என்று கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் முறையீடு குறித்து கேட்டதற்கு, "இது எதிர்பார்த்ததுதான். சட்ட ரீதியாக என்னை செய்ய முடியுமோ, அதன்படி ஆராய்ந்து அணுகுவோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சிறப்பு நிதித் திட்டம் கோரப்படுமா என்றதற்கு, "இந்த அரசிடமா? இந்த அரசு வெளியேறப் போகிற அரசு. புதிய அரசு ஜூன் மாதத்தில் அமையும். அப்போது பார்த்துக்கொள்வோம்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x