Published : 21 May 2014 02:56 PM
Last Updated : 21 May 2014 02:56 PM

4-வது முறையாக ஒடிஷா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்: 21 அமைச்சர்களில் 8 பேர் புதியவர்கள்

நடந்து முடிந்த ஒடிஷா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் (67) தொடர்ந்த 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.சி. ஜமீர், நவீன் பட்நாயக் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்றுக்கொண்ட பிறகு புரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த நவீன் பட்நாயக் கூறுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் குழுவாக இணைந்து செயல்படுவோம்" என்றார்.

புதிய அமைச்சரவையில் 11 கேபினெட் மற்றும் 10 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 5-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோகேந்திர பெஹிரா உள்பட 8 பேர் அமைச்சரவைக்கு புதியவர்கள். உஷா தேவி (கேபினேட்), ஸ்னேஹங்கினி சுரியா (இணையமைச்சர்) ஆகிய 2 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த முறை கேபினெட் அமைச்சராக இருந்த சூர்ய நாராயண் பத்ரோ, மஹேஸ்வர் மொஹந்தி, நிரஞ்சன் புஜாரி, இணை அமைச்சராக இருந்த ரஜனிகாந்த சிங் மற்றும் சுப்ரத் தராய் ஆகிய 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முந்தைய அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பிரசண்ண ஆச்சார்யா, ரபி நாராயண் நந்தா மற்றும் பிரதாப் கேஷரி தேவ் ஆகிய 3 பேர் தேர்தலில் தோல்வியடைந்தனர். மேலும், கல்பதருதாஸ் மற்றும் சரோஜினி ஹெம்ப்ரம் ஆகிய 2 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

4-வது முறையாக..

ஒடிஷா முதல்வராக 4-வது முறையாக பொறுப்பேற்றதன் மூலம் நவீன் பட்நாயக், தனது தந்தை உள்பட மேலும் சில மாநில தலைவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் 2 முறை முதல்வராக இருந்தார். கடந்த 1961 முதல் 1963 வரையும், அதன் பிறகு 26 ஆண்டுகளுக்குப் பின்னர் 1990 முதல் 1995 வரையிலும் இந்தப் பதவியில் இருந்தார்.

ஹரேகிருஷ்ண மஹதாப் மூன்று முறை முதல்வராக (8 ஆண்டுகள்) இருந்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜே.பி. பட்நாயக் மூன்று முறை முதல்வராக (12 ஆண்டுகள்) பதவி வகித்துள்ளார். இவர் இப்போது அசாம் ஆளுநராக உள்ளார். இவர்களை எல்லாம் மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார் நவீன் பட்நாயக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x