Published : 30 Mar 2015 08:33 AM
Last Updated : 30 Mar 2015 08:33 AM

தேர்தல் நிதி ரூ.200 கோடி வசூலிக்க திமுக இலக்கு: சங்கடத்தில் கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள்

திமுகவில் மக்களவை தேர்தலுக்காக நிதி வசூலிக்கப்பட்டு ஓராண்டே முடிந்துள்ள நிலையில், மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நிதி வசூல் தொடங்கியுள்ளதால் கட்சியின் கீழ்நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர். மாவட்ட வாரியாக தேர்தல் நிதியளிப்பு கூட்டங்களை நடத்தவும், அதன்மூலம் ரூ.200 கோடி திரட்டவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், தொண்டர்கள் தேர்தல் நிதி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியிருந்தார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி ரூ.1.4 கோடி அளவுக்கு நிதி வசூலாகியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நிதி வசூலை மேலும் தீவிரப்படுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் தேர்தல் நிதியளிப்பு கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்காக நிதியளித்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் மீண்டும் நிதி வசூலிக்கப்படுவதால் திமுகவின் அடிமட்ட தொண்டர்களும் நிர்வாகிகளும் சங்கடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மக்களவை தேர்தலின்போது ரூ.100 கோடி இலக்கு வைக்கப்பட்டு ரூ.108 கோடி அளவுக்கு தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு தமிழகத்திலேயே அதிகளவில் ரூ.7.07 கோடி நிதியளித்தார். இதனால் தலைமையிடம் அவர் நெருக்கமானார். இந்தச் சூழலில் மீண்டும் தேர்தல் நிதி வசூல் தொடங்கியுள்ளது.

இந்த முறை திமுகவின் நிர்வாக அமைப்பு சீரமைக்கப்பட்டதால், 65 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தல் வசூலைவிட தற்போது ஒரு மடங்காவது அதிகமாக வசூலிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்துக்கு 3 முதல் 4 கோடி அளவு நிதி வசூல் செய்வதென்று மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டியே மாவட்ட வாரியாக தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் தொடங்கவுள்ளன. இதற்காக ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, வட்டம் வாரியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நிதி வசூலிக்க மாவட்டச் செயலாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ஏற்கெனவே அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவர்கள் எளிதில் பணம் கொடுத்து விடுவர். அடிமட்ட நிர்வாகிகளான எங்களால் அதிகளவில் நிதியளிப்பது என்பது சாத்தியமற்றது. ஓராண்டுக்கு முன்புதான் மக்களவை தேர்தல் நிதி கொடுத்தோம், அதற்குள் நிதி கேட்பது எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் கட்சிக் காக முடிந்தளவு நிதி அளிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x