Last Updated : 15 Mar, 2015 11:48 AM

 

Published : 15 Mar 2015 11:48 AM
Last Updated : 15 Mar 2015 11:48 AM

வழக்கறிஞர் இல்லாமல் வாதாடி நுகர்வோர் நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் பெறலாம்

மார்ச் 15 - இன்று உலக நுகர்வோர் உரிமை தினம்

வழக்கறிஞர் இல்லாமல் நுகர்வோர், தானே நீதிமன்றத்தில் வாதாடி உரிய நிவாரணம் பெறலாம். இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகம் ஏற்பட வேண்டும்.

இதுகுறித்து ராமநாதபுரம், பாரதிநகரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அ.முகம்மதுஜான் ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் தெரிவித்தது:

வாடிக்கையாளரான என்னிடம் தெரிவிக்காமலேயே, நான் வாங்கிய விவசாயக் கடனை புதுப்பித்ததற்காக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி நஷ்டஈடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கறிஞர் இல்லாமல் நானே வாதாடி தீர்ப்பை பெற்றுள்ளேன். இதுகுறித்து பொதுமக்கள் விழிப் புணர்வு அடைய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அ.முகம்மதுஜானை நமது செய்தி யாளர் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதா வது: கடந்த 2010-ம் ஆண்டு நவம் பரில் ராமநாதபுரம் கார்ப்பரேஷன் வங்கியில் எனது நகைகளை வைத்து ரூ.70 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றிருந்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் தன்னிச்சை யாக எனது கடனை எனக்குத் தெரியாமல் புதுப்பித்ததை 2011-ம் ஆண்டு ஏப்ரலில் அறிந்தேன்.

இதுகுறித்து வங்கியின் கோவை மண்டல நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை சேகரித்தேன். அதனைத் தொடர்ந்து வங்கியின் தன்னிச்சையான செயல் பாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலை யும், சேவைக் குறைபாட்டுக்கு உரிய நஷ்டஈடும் வழங்கக் கோரி, ராமநாதபுரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் 14.02.2012 அன்று வழக்கை பதிவு செய்து, வழக்கறிஞர் இல்லாமல் நானே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வாதிட்டேன்.

இறுதியில் இந்த மனுவை விசாரித்த ராமநாதபுரம் நுகர்வோர் நீதிமன்றம், வேளாண் கடனை புதுப்பிப்பது குறித்து, வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்காமல், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சேவைக் குறைபாடாக செயல்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர் அடைந்த மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம், நஷ்டஈடாக ரூ.20 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர்.

பொருட்களின் தரம், விலை அந்த பொருளுக்கான நுகர்வோர் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும் பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எஃப்.பி.ஓ. உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளதா? பொருட்களின் விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, ரசீதில் சேவை வரி, பதிவு எண், மதிப்பு கூட்டுவரி ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

எந்தவொரு நிறுவனத்தில் இருந்தும் வாங்கும் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், நுகர்வோர் தானாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் வாதாடி அதற்கான நிவாரணத்தை பெற முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x