Published : 05 Feb 2015 08:41 PM
Last Updated : 05 Feb 2015 08:41 PM

உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக மைக் ஹஸ்ஸி

உலகக்கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக மைக் ஹஸ்ஸி செயல்படவுள்ளார்.

1992ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வாய்ப்புகளை பல்வேறு விதங்களில் தவற விட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு 6 வாரங்கள் மைக் ஹஸ்ஸி உதவவுள்ளார்.

ஹஸ்ஸியின் மேலாளர் இந்தத் தகவலை இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் உறுதி செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சிகளில் மைக் ஹஸ்ஸி ஆலோசனைகளை வழங்குகிறார்.

மேலும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் எப்படி விளையாடுவது என்பது பற்றியும் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளார் மைக் ஹஸ்ஸி.

"நாங்கள் மைக் ஹஸ்ஸியுடன் கலந்தாலோசனை செய்தோம், அதன் படி அவர் ஆலோசகராக வர ஒப்புக் கொண்டார்.” என்று தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மென்களில் ஒருவரான மைக் ஹஸ்ஸி ஒருநாள் போட்டிகளில் 48.15 என்ற சிறந்த சராசரி வைத்திருப்பவர். 3 சதங்கள் 39 அரைசதங்கள் இவருக்குச் சொந்தம்.

ஏற்கெனவே டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியானதும், அதனை மைக் ஹஸ்ஸியும் வரவேற்றுள்ளார் என்ற செய்திகளும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முந்திக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x