Published : 28 Feb 2015 09:04 am

Updated : 28 Feb 2015 09:04 am

 

Published : 28 Feb 2015 09:04 AM
Last Updated : 28 Feb 2015 09:04 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 8

8

முஸ்லிம்களுக்குப் புனிதமான பல இடங்கள் சவுதி அரேபியாவில் உள்ளன. அவற்றில் முக்கியமான இரண்டு, மெக்காவும் மெதினாவும். மெக்காவில் உள்ள மசூதியின் பெயர் மஸ்ஜித்-அல்-ஹராம். இதில்தான் இஸ்லாமின் மிக மிகப் புனிதமான காபா உள்ளது. மெதினாவில் உள்ள மசூதியின் பெயர் அல்-மஸ்ஜித் அல்-நபாவி. இங்குதான் முகமது நபியின் சமாதி உள்ளது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது என்றாலும் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய மதங்களில் ஒன்று இஸ்லாம்.

தொழுகை நேரங்களில் யாரும் கடைகளுக்குச் செல்ல மாட்டார் கள். எனவே அங்கு தொழுகை நேரத்தில் கடைகள் திறந்திருக்காது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சவுதி அரேபியாவில் குடியுரிமை கிடையாது. மெக்காவிற்குள் பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் பிற மதத்தினர் வழிபடுவதற்கு அவர்களுக்கான எந்த வழிபாட்டுத் தலத்தையும் கட்ட அனுமதி கிடையாது. முஸ்லிம் அல்லாதவர்கள் சவுதி அரேபியாவில் இறந்தால் அவர்கள் அந்த நாட்டு எல்லைக்குள் புதைக்கப் படமாட்டார்களாம்.

முன்னொரு காலத்தில் சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் நிறைய இருந்தன. 1980-க்களில் புதிய இஸ்லாமிய அலை வீசிய போது பல மாற்றங்கள். நாட்டிலுள்ள அத்தனை திரை அரங்குகள் மற்றும் நாடக அரங்குகளையும் அரசு இழுத்து மூடியது. இதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்பதல்ல. 2005-ல் மன்னர் அப்துல்லா ஒரு சில திரைப்பட அரங்குகளை மட்டும் திறக்க அனுமதி அளித்திருக்கிறார்.

சில நூற்றாண்டுகளாகவே கலைகளை வளர்ப்பது என்பது சவுதி அரேபியாவில் பெரும்பா லும் வேண்டாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

மிகச் சிறந்த கல்விமான் களும் இலக்கியவாதிகளும் இருந்தும்கூட மதம் சாராத இலக்கியங்களுக்கு அங்கு ஆதரவு சிறிதும் இல்லை. தவிர நூல்களுக்குக் கடுமையான தணிக்கை முறை உண்டு.

சவுதி அரேபியா சந்தேகமில்லாமல் ஓர் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் நீதிதுறை முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்த இடத்தில் ஷரியா பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த சட்டங்கள் திருகுர்-ஆனை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்ததாக அந்த சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டது ஸுன்னாவை. ஸுன்னா என்பவை நபிகள் நாயகம் தன் வாழ்நாளில் கடைப்பிடித்தவை மற்றும் பேசியவை. மூன்றாம் நிலையாக ஷரியா கருதுவது ‘இஜ்மா’வை. இஜ்மா என்பது ஒரு குறிப்பிட்ட வழக்கில் முஸ்லிம் அறிஞர்கள் ஒருமித்த குரலில் அளிக்கும் ஆலோசனைகள். நான்காவது தான் தர்க்கம்.

சவுதி அரேபியாவின் நீதித்துறை என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது. இது பெரிய பகுதி என்று ஷரியா நீதிமன்றங்களைச் சொல்லலாம். இவைதான் பெரும் பாலான வழக்குகளை நடத்து கின்றன.

ஷரியாவுக்கு அடுத்ததாக உள்ளது குறை தீர்க்கும் வாரியம் (Board of Grievances). அரசு தொடர்பான குறைகள் இதில் அலசப்படும். (அதற்காக மன்னரின் மீதே குறை கூறலாம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.)

நீதித்துறையின் மூன்றாவது அங்கமாக அரசு அமைச்சகத்தின் பல்வேறு குழுக்களைக் கூறலாம். இவை தொழிலாளர் பிரச்னை போன்றவற்றைக் கையாளு கின்றன.

சட்டப்படி ஓர் ஆண், 4 பெண் களை மணக்கலாம். ஆனால் அவன் தன் அனைத்துக் குடும் பங்களையும் சமமாகவும் சிரமம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான்கு திருமணங்கள் அனு மதிக்கப்படுகின்றன என்றாலும் ஒன்று அல்லது இரண்டு திரு மணங்களுக்கு மேல் யாரும் செய்து கொள்வதில்லை. பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணம்.

செல்வச் செழிப்பு உள்ளவர் கள் மட்டுமே நான்கு வரை செல் கிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு மனிதன் ‘எந்த ஒரு குறிப் பிட்ட சமயத்திலும்’ நான்கு குடும் பங்களுக்குமேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டத்தையே கொஞ்சம் வளைக்கிறார்கள் அரச குடும்பத்தினர்.

மரண தண்டனை என்பது சவுதி அரேபியாவில் மிகவும் சகஜம். எதற்கு மரண தண்டனை கொடுப்பார்கள்? கொலை, விப சாரம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுடன் இந்த பட்டியல் நின்று விடவில்லை. தன்பால் ஈர்ப்பு, கணவரல்லாத ஒருவ ருடன் உறவு கொள்ளுதல் ஆகிய வற்றோடு, இஸ்லாம் மார்க் கத்தைத் துறப்பவர்களுக்கும் மரண தண்டனைதான். (எப்போதாவது போனால் போகிறது என்று ஆயுள் தண்டனை அளிப்பார்கள்).

மரண தண்டனையை விடக் கொடுமை அந்த மரணம் எப்படி விதிக்கப் படுகிறது என்பது. வாளால் கழுத்தை அறுப்பதுதான் அங்கு வழக்கம். ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துவிடும் அளவிற்கு வாளும் கூர்மையானது, வெட்டுபவர்களும் திறமைசாலிகள். ஆனால் இந்தத் திறமைசாலிகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து விட்டது. இதனால் துப்பாக்கியால் சுடுவது என்கிற முறையிலும் ஆங்காங்கே மரண தண்டனையை நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

மந்திர தந்திரங்ளுக்கெல்லாம் சவுதி அரேபியாவில் வாய்ப்பே இல்லை. அப்படி யாராவது ஈடு பட்டால் அவர்களுக்கு (உங்கள் யூகம் சரிதான்) மரண தண்டனை தான். அவர்கள் எந்த அளவிற்கு மந்திர தந்திரங்களை வெறுப்பவர் கள் என்பதற்கு சரியான உதாரணம் ஹாரி பாட்டர் நாவல்களுக்கு அந்த நாட்டில் விதிக்கப்பட்ட தடை.

(உலகம் உருளும்)

அரேபியா வரலாறுசவுதி அரேபியா வரலாறுவரலாற்று தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்

You May Like

More From This Category

More From this Author