Published : 10 Feb 2015 10:02 AM
Last Updated : 10 Feb 2015 10:02 AM

கல்லூரி மாணவர்கள் 3 பேர் சென்னையில் கடலில் மூழ்கி பலி

பெசன்ட் நகர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நாவலூரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியும் அருகிலேயே உள்ளது. நேற்றுமுன்தினம் மாலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 15 பேர் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தனர். 7 மாணவர்கள் கரையில் உட்கார்ந்திருக்க, 8 பேர் மட்டும் கடலில் இறங்கி விளையாடினர்.

அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் 8 பேரும் சிக்கினர். இவர்களில் 3 பேர் முயற்சி செய்து உடனே கரைக்கு வந்துவிட்டனர். 5 பேரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சல் போட, அருகே இருந்த மீனவர்கள் உடனே கடலுக்குள் குதித்து வினித், சுந்தரகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

மற்ற மாணவர்களான சூர்யா, சுசீந்திரன், பிரதீப் ஆகியோரை மீட்க முடியவில்லை. உடனே சாஸ்திரி நகர் போலீஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகு மூலமாகவும், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அலையில் அடித்து செல்லப்பட்ட மூவரில் சூர்யா என்ற மாணவரின் உடல் திருவான்மியூர் கடற்கரை பகுதியிலும், சுசீந்திரன் என்ற மாணவரின் உடல் கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியிலும் நேற்று காலையில் கரை ஒதுங்கியது.

இருவரின் உடலையும் சாஸ்திரி நகர் போலீஸார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சூர்யா கடலூரையும், சுசீந்திரன் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். சுசீந்திரன், சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மற்றொரு மாணவர் பிரதீப்பை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x