Published : 11 Feb 2015 10:43 AM
Last Updated : 11 Feb 2015 10:43 AM

உலக மசாலா: வாழைப்பழ அரக்கன்!

டச்சு கலைஞர் ஸ்டீபன் ப்ருஸ்ச் சாதாரண வாழைப் பழத்தில் அட்டகாசமாக உருவங்களைச் செதுக்கி விடுகிறார். 37 வயது ஸ்டீபன் கிராபிக் டிசைனர். வாழைப் பழத்தின் தோலிலும் சதைப் பகுதியிலும் யானை, ஒட்டகச்சிவிங்கி, மீன், மர்லின் மன்றோ போன்ற விதவிதமான ஓவியங்களை வடிக்கிறார்.

’சில ஆண்டுகளுக்கு முன்பு பால்பாயிண்ட் பேனாவால் வாழைப் பழத்தில் வரைய ஆரம்பித்தேன். அதைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே உருவங்களைச் செதுக்கி, புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டேன். வரவேற்பு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது!’ என்கிறார் ஸ்டீபன். முதல் 50 வாழைப்பழ உருவங்களைப் புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டீபன்.

சிம்பிளா இருந்தாலும் அழகா இருக்கு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகச் சிறிய கடை உள்நாட்டினரையும் வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்தக் கடைக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினால், உள்ளிருந்து ஷிபா என்ற நாய் எட்டிப் பார்க்கிறது.

சிகரெட், சாக்லெட் என்று கேட்கும் பொருள்களை எடுத்துத் தருகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் கடைக்குள் சென்று அமர்ந்துவிடுகிறது. நாயைப் பார்ப்பதற்காகவே இந்தக் கடைக்கு ஏராளமானவர்கள் வந்து, பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்.

அடடா! புத்திசாலி ஷிபா!

சீன இணையதளத்தில் வெளியான ஒரு வீடியோ எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 17 மாதக் குழந்தையை ட்ரெட்மில்லில் நடக்க வைத்திருக்கிறார்கள் பெற்றோர். கைகளைப் பின் பக்கம் கட்டியபடியே நடக்க ஆரம்பிக்கிறது குழந்தை. அவனது அப்பா, இன்னும் வேகம்… இன்னும் வேகம் என்று கத்திக்கொண்டே இருக்கிறார். அவனது அம்மா, அதிக வேகம் வேண்டாம் என்று கத்துகிறார்.

இருவர் சொல்வதையும் கேட்டு வேகமாகவோ, வேகத்தைக் குறைத்தோ குழந்தை கன்வேயர் பெல்ட் மீது நடந்துகொண்டே இருக்கிறது. குழந்தை நடப்பதைப் பார்த்து பெருமிதத்தில் பெற்றோர் சிரிக்கிறார்கள். குழந்தைகளை ட்ரெட்மில்லில் நடக்கவே வைக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். 2013-ம் ஆண்டில் ட்ரெட்மில்லில் ஏற்பட்ட விபத்துகளில், 95 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்பட்டதுதான் என்று எச்சரிக்கிறார்கள்.

குழந்தையை இப்படி கொடுமைப்படுத்தலாமா?

பிரிட்டனில் வசிக்கும் ஹன்னாவின் குடும்பத்தில் கடந்த 5 தலைமுறைகளாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. 1809-ம் ஆண்டு மைலா லாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு 200 ஆண்டுகள் வரை அவர்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. ஹன்னாவும் அவரது கணவர் மார்க்கும் பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்தது. மைலா லாரி என்று பெயர் சூட்டினர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிங்க் வண்ண பலூன்கள், ரிப்பன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. உறவினர்களும் நண்பர்களும் பெண் குழந்தையின் வருகையைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். மூன்று அண்ணன்களுடன் ஓர் இளவரசி போல வலம் வருகிறாள் மைலா.

வராது வந்த மாமணி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x