Last Updated : 21 Feb, 2015 10:35 AM

 

Published : 21 Feb 2015 10:35 AM
Last Updated : 21 Feb 2015 10:35 AM

பாத்திரங்கள், ஆபரணங்களைப்போல குண்டு பல்பிலும் உளியால் பெயர் வெட்டும் தொழிலாளி- ஒரு எழுத்துக்கு 80 பைசா கட்டணம்

பொருட்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வதற்காக அவற்றில் பெயர் வெட்டுவது வழக்கம். இந்தத் தொழிலாளர்கள் பாத்திரக் கடை, நகைக் கடை உள்ள பகுதியில் தொழில் செய்வர். சிலர், குடியிருப்புப் பகுதிகளுக்கு வெட்டுக் கருவிகளுடன் சென்று பெயர் வெட்டிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

குடும்ப விழாக்களில்கூட அன்பளிப்பாக பாத்திரங்கள் வழங்குவது குறைந்து, தற்போதெல்லாம் வண்ணத்தாள் ஒட்டிய பரிசுப் பொட்டலங்களைத்தான் அதிகளவில் பார்க்க முடிகிறது. ஒருவேளை பாத்திரத்தை அன்பளிப்பாக அளிக்கும்பட்சத்தில், பெயர் வெட்டிக் கொடுப்பதை மரியாதைக் குறைவாக நினைப்பதால், தொழில் நலிவடைந்துவிட்டதாக உளியால் பெயர் வெட்டும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சூழலில், அந்தத் தொழிலை இன்றும் தொடர்ந்து செய்து வருவதுடன் குண்டு பல்பு, கோழி முட்டை ஓடு, கண்ணாடி போன்றவைகளிலும் உளியால் பெயர்களை பொறித்துத் தந்து அசத்தி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த தொழிலாளி வெ.அழகு (65).

இந்தத் தொழிலை கலையாக நேசிக்கும் அழகு கூறியதாவது:

விழாக்களின்போது அன்பளிப்பு அளிக்கப்படும் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், மரப் பொருட்களில் பெயர் பொறித்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கலைக்கு முதலீடு தேவையில்லை; ஆர்வமும், திறமையுமே போதும். இந்தத் தொழிலை 1970-களில் கற்றுக் கொண்டேன். பின்னர், எழுத்துக்கு 3 பைசா வீதம் கூலிக்கு தொழிலைத் தொடங்கினேன்.

கோயில் பூஜைப் பொருட்கள், அணிகலன்கள், தங்க நகைகளுக்குப் பெயர் வெட்டுவேன். கூப்பிடும் இடத்துக்குச் சென்றும் தொழிலை செய்து வருகிறேன். இப்போதெல்லாம் விழாக்களில் பாத்திரம் அன்பளிப்பு அளிப்பது குறைந்துவிட்டது. மேலும், பெயர் வெட்டுவதை பழைய கலாச்சாரம் என்று வெறுப்பதாலும், அப்படியே பெயர் வெட்ட விரும்பினாலும் இயந்திரம் மூலம் வெட்டிக்கொள்வதாலும் தொழில் நலிவடைந்துவிட்டது.

ஆனால், பொன்னமராவதி செட்டிநாட்டுக் கலாச்சாரம் சார்ந்த பகுதி என்பதால் இந்தப் பகுதியில் இன்னமும் பெயர் வெட்டும் கலாச்சாரம் ஓரளவுக்கு உள்ளது. பாத்திரம், ஆபரணங்களில் பெயர் பொறிப்பது படிப்படியாக நலிவடைவதால், மக்கள் தற்போது பயன்படுத்தும் மெல்லியப் பொருட்களில் பெயர் பொறித்துத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

குண்டு பல்புகள், முட்டை ஓடு, செல்போன் கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றில் எந்த சேதமும் ஏற்படாத வகையில் உளியால் பெயர் பொறித்துத் தருகிறேன். ஒரு எழுத்துக்கு 80 பைசாதான் வசூலிக்கிறேன்.

விருப்பத்தோடு கற்றுக்கொண்ட இந்தத் தொழில் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இயந்திரம் மூலம் வெட்டப்படும் பெயர்கள் காலப்போக்கில் அழிந்துவிடும். ஆனால், உளியால் செதுக்கிய பெயர் உள்ளிட்ட எதுவும் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்கிறார் அழகு.

உளியின் உதவியுடன் குண்டு பல்பில் பெயர் வெட்டுகிறார் அழகு. (அடுத்த படம்) குண்டு பல்பில் வெட்டப்பட்டுள்ள பெயர்.

பாத்திரம், ஆபரணங்களில் பெயர் பொறிப்பது படிப்படியாக நலிவடைவதால், மக்கள் தற்போது பயன்படுத்தும் மெல்லியப் பொருட்களில் பெயர் பொறித்துத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x