Published : 15 Sep 2014 09:27 AM
Last Updated : 15 Sep 2014 09:27 AM

மக்கள் தொண்டில் முழுமனதோடு பாடுபடுவோம்: அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்போம் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அண்ணா பிறந்தநாளை யொட்டி அதிமுக தொண்டர் களுக்கு ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விடுதலை பெற்ற இந்தியாவில் மாற்றங்களையும் புரட்சிகளையும் தேர்தல் வழியாக வன்முறை இன்றி செய்து முடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத ஜனநாயக உணர்வுகளைக் கொண்ட அண்ணா, கொட்டும் மழையில் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் நிரந்தர இடம் பெற்று, 1967-ல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார்.

அண்ணாவின் அரசியல் வெற்றி ஒவ்வொன்றிலும் எம்.ஜி.ஆரின் கொள்கைமாறா உழைப்பும், கொண்டதையெல்லாம் அள்ளித் தரும் கொடை உள்ளமும் பெரும் பங்கு வகித்தன. தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ்ச் சமூகத்தின் முன்னேற் றத்துக்காகவும் உருவான திராவிட இயக்கம், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற தன்னலமற்ற மக்கள் இயக்கமாக நாட்டு மக்கள் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறது. அண்ணாவின் அறிவு, ஆற்றல், உழைப்பு, மனிதாபிமானம், ஜனநாயகப் பண்பு, சமூக நீதிக்கான வேட்கை ஆகியவற்றின் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.

அண்ணாவின் பன்முக ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன். தமிழகத்துக்கு சில காலம் மட்டுமே முதல்வராகப் பணியாற்றியபோதும், அந்தக் குறுகிய காலத்தில் மக்களுக்கு அண்ணா செய்த சாதனைகளை எனக்கு வழிகாட்டும் நெறிகளாகக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை எனது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது.

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களிலும், பல்வேறு இடைத்தேர்தல்களிலும் தமிழக மக்கள் அதிமுகவுக்கு அளித்து வரும் பேராதரவு, என் ஆட்சிக்கு அளிக்கப்படும் நற்சான்றாக விளங்குகிறது. மக்களின் இந்த அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x