Published : 07 Sep 2014 12:39 PM
Last Updated : 08 Sep 2014 01:14 PM
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1100 கோடியை மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள நிலையில் கூடுதலாக ரூ.1000 கோடி சிறப்பு நிவாரண உதவியை பிரதமர் மோடி அறிவித்தார்.
பலி எண்ணிக்கை 175 ஆக உயர்வு
மாநிலத்தின் பிரதான நதியான ஜீலத்தில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால் நகரில் பெரும்பான்மை பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மின் விநியோகம், தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் மையப் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் பகுதி வெள்ளத்தில் மிதப்பதால் மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு அனந்த்நாக், குல்காம், சோபியான், புல்வாமா மாவட்டங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி மழை வெள்ளத்தால் 160 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 175 ஆக உயர்ந்தது.
மீட்புப் பணியில் 23 விமானம், 26 ஹெலிகாப்டர்கள்
கடந்த சில நாட்களில் 50-க்கும் மேற்பட்ட பாலங்கள் உடைந்துள்ளன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வெள்ள அரிப்பால் துண்டிக்கப்பட்டுள்ளன. நகர்- ஜம்மு நெடுஞ்சாலை கடந்த வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதால் 1500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சம் ஏக்கர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராணுவம் சார்பில் 23 போர் விமானங்களும் விமானப் படை சார்பில் 26 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 13,000 பேரை ராணுவம் மீட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மீட்புப் பணிக்காக படகில் சென்ற 20 வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 18 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
சி130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்கள் மூலம் புனே, காந்திநகர் ராணுவத் தளங்களில் இருந்து படகுகள், நிவாரணப் பொருட்கள் நகருக்கு கொண்டு வரப்பட்டன. டெல்லியில் இருந்து மருத்துவக் குழுவினரும் காஷ்மீர் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழக் கிழமை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1100 கோடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் விமானத்தில் சென்று பார்வையிட்டார். நிவாரண, மீட்புப் பணிகள் குறித்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஜம்மு பகுதியில் நிருபர் களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
மீட்புப் பணிகள் தொடர்பாக ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இது காஷ்மீர் மக்கள் மட்டும் சந்திக்கும் சோகம் அல்ல. இது ஒரு தேசிய பேரிடர்.
இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். போதுமான படகுகள், மருந்து பொருட்கள் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு லட்சம் படுக்கை விரிப்புகள், 500 கூடாரங்கள், 50 டன் பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கப்படும்.
காஷ்மீர் மாநிலத்துக்கு தாராளமாக வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு இதர மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
பாகிஸ்தானுக்கும் உதவிக்கரம்
பாகிஸ்தானிலும் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாடு விரும்பினால் தேவையான நிவாரண உதவிகளை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.