Published : 03 Mar 2015 13:09 pm

Updated : 03 Mar 2015 13:09 pm

 

Published : 03 Mar 2015 01:09 PM
Last Updated : 03 Mar 2015 01:09 PM

வாசி! வாசி! வாசி!- வாசகர் பக்கம்

அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் என் மனதுக்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே” என்கிறார்

“நூலகம் இல்லாத ஊரை நான் ஊராகவே ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்கிறார் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்த லெனின்.

பொது நூலகங்கள் வந்த பிறகுதான் தமிழகத்தில் வாசிப்பு அதிகரித்தது. நம் வீட்டு அருகில் உள்ள பொது நூலகங்களுக்குக் குழந்தைகளை அனுப்பி, அவர்களை ஆர்வப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளிப்பாடப் புத்தகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சமூக அக்கறையுள்ள புத்தகங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

வீடுகளில் புத்தகங்கள் வைப்பதற்கென இடங்களை ஒதுக்கி அவர்களை ஆர்வப்படுத்த வேண்டும்.

அவர்கள் படிப்புகளில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் போதோ அல்லது விளையாட்டில் சிறந்து விளங்கும் போதோ அவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இதனால், அடுத்தடுத்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

ஆழ்ந்த வாசிப்பு

படிக்கும்போது அதனுடன் ஒன்றிவிட வேண்டும். அப்போதுதான் அதனுடைய ஆழ்ந்த கருத்துகளைப் புரிந்துகொள்ள முடியும். சில புத்தகங்கள் படிக்கக் கடினமாக இருக்கும். அதுபோன்ற தருணங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை கருத்தைப் புரிந்து, ஆழ்ந்து படிக்க வேண்டும்.

நாம் அதனுடன் பேசுவதுபோல் படிக்க வேண்டும். ஒரு சில தலைப்புகளை விரைவாகப் படிக்க வேண்டும். ஒரு சில தலைப்புகளை நிதானமாகப் படிக்க வேண்டும்.

விரும்பிய வாசிப்பு

நாம் எதை விரும்புகிறோமோ அதை வாசிக்க வேண்டும். கடமைக்காகவோ அல்லது பிறரின் விருப்பத்துக்காகவோ வாசிக்கக் கூடாது.

ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிமிடங்களும் தாமதம் செய்யாமல், விரும்பியதைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

புத்தகம் படிப்பதும் இறைவனைத் தியானிக்கும் தியானம்தான். புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அடைய முடியும் என்பது உண்மை.

வாசிப்பில் குறிப்பு

நாம் படிக்கும்போது, அதில் வரும் முக்கியமான விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறிப்பெடுத்துக் கொள்ளும்போது, முழு புத்தகத்தின் சுருக்கம் நமக்குக் கிடைத்து விடும்.

புரிந்து வாசி

உள்வாங்கும் பொழுதுதான் அந்த விஷயங்களை நம்மால் செயல்படுத்த முடியும். வரிகளில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, திரும்ப ஒரு முறை அந்த வரிகளைப் படிக்க வேண்டும்.

அவ்வாறு படிக்கும்போது புத்தகத்தின் கருத்து ஆழமாகப் பதிந்து விடும். எப்போதும் அதைப்பற்றிய அறிவு நம்மிடம் இருந்து கொண்டே இருக்கும்.

வாசித்ததைப் பகிர்தல்

புத்தகத்தைப் பற்றிய நிறை, குறை விஷயங்களை விவாதம் செய்ய வேண்டும். அவ்வாறு விவாதம் செய்யும்போழுது, நாம் படித்த புத்தகத்தைப் பற்றிய மற்றவர்கள் தெரிந்த விஷயம் வெளியே வரும். இது நமக்குக் கூடுதல் அறிவு ஏற்படும்.

நமக்குச் சில நண்பர்களை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். நாம் வாசிக்கக்கூடிய ஒவ்வொரு புத்தகத்தின் முக்கியமான கருத்துகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதைப் பற்றிய விவாதத்தைச் செய்ய வேண்டும்.

அடையாளமிடுதல்

நாம் வாசிக்கும்போழுது முக்கியமான வரிகள், ஆண்டுகள் அல்லது பழமொழிகள் வரும்போது, அதை அடையாளமிடுதல் முக்கியமானதாகும்.

அவ்வாறு அடையாளமிடும்போது, நாம் எப்போழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். முக்கியமான குறிப்புகளை, எவ்வளவு வருடமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் புத்தகம் படிக்கும்போது அருகே ஸ்கெட்ச் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். வாசிக்கும்போது வரும் முக்கியமான விஷயங்களை அடையாளமிட்டுக் கொண்டே வர வேண்டும்.

பயணங்களில் வாசிப்பு

நமக்கு எப்போழுதும் பயணங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். அவ்வாறு நமக்குக் கிடைக்கும் பயணங்களை வாசிக்கப் பயன்படுத்த வேண்டும்.

அது எந்தப் பயணமாக இருந்தாலும் அதில் நம்முடைய புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டியதுதான்.

நெல்லை சலீம் erusaleem@gmail.com

வாசகர் பக்கம்வாசிப்புபுத்தகம்பயணம்புரிதல்

You May Like

More From This Category

More From this Author