Last Updated : 10 Mar, 2014 12:00 AM

 

Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

சிறு துரும்பும் சிற்பம் செய்ய உதவும்- நுண்சிற்ப வேலையில் அசத்தும் சிற்பக்கலைஞர்

சிற்ப வேலை என்றாலே நுணுக்கமானது. அதிலும் நுணுக்கமான பொருட்களிலேயே சிற்பம் செய்து அசத்துகிறார் நாச்சியார்கோயில் அருகே மாத்தூரில் உள்ள சிற்பி செல்வராஜ்.

சிறு துரும்பும் இவருக்கு சிற்பம் செய்ய உதவுகிறது. பல் குத்தும் குச்சி, கருவை மர முள், சிலேட்டு குச்சி, சாக்பீஸ், உடைந்த மார்பிள் துண்டுகள், மரத்தின் வேர்கள் என்று எல்லாவற்றையும் சிற்பமாக்குகிறார். அதிகபட்சமாக கட்டைவிரல் அகலத்தில் அடங்கிவிடுகிறது இவரது சிற்பங்கள்.

“பள்ளிக்கூடத்துல படிக்கும்போது உடைஞ்ச சாக்பீஸ்ல நகத்தால கிள்ளி ஏதாவது ஒரு உருவத்தை கொண்டு வர முயற்சி செய்வேன். அதுல ஆரம்பிச்ச ஆர்வம் ஒரு சிற்பியா செதுக்கியது. ஆரம்ப கட்டத்துல சிற்ப சாஸ்திரங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கிறதுக்காக சிற்பிகளோடு சேர்ந்து கோயில் வேலைகளுக்கு போனேன். அந்த வேலைகளில் ஈடுபட்டு அதைப் பற்றி நல்லா தெரிஞ்சுகிட்டு நமக்கு பிடிச்சமாதிரி வேலைல இறங்கினேன்.

குறைந்தது 4, 5 அடி உயரத்துல சிற்பம் செஞ்சாதான் உடல் பாகங்களை முகபாவங்களை சரியா கொண்டு வர முடியும்னு பரவலா இருந்த கருத்தை மாத்தணும்கிறது என்னோட வெறி. அதனால சிறிய சிற்பங்களை செய்யுறதுலயே என்னோட கவனம் குவிய ஆரம்பிச்சது. ஒரு இஞ்ச், ரெண்டு இஞ்ச் நீள அகலம் இருக்கிற உடைஞ்ச மார்பிள் துண்டுகளை இதுக்கு பயன்படுத்தினேன். நுணுக்கத்தை கண்டுபிடிச்சேன். இப்ப எவ்வளவு சிறிய துண்டிலும் என்னால் சிற்பம் செய்துவிட முடியும்” என்று தனக்கு இந்த கலையில் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தை சொல்கிறார் செல்வராஜ்.

ஒரு மில்லிமீட்டர் உயரமும், ஒரு செண்டி மீட்டர் அகலமுள்ள மார்பிள் துண்டில் யானை, நடனமாடும் மங்கை என்று இவர் செதுக்கிய எல்லாமே மிகச்சிறிய சிற்பங்கள்தான். மார்பிள், சாக்பீஸ் என்று இருந்தவர் தற்போது மரத்தின் வேர்களுக்கு மாறியிருக்கிறார். 60 வகையான விருட்சங்களின் வேர்களைப் பயன்படுத்தி சிற்பங்களை செய்கிறார்.

அந்த சிறிய சிற்பங்களிலும் தன்னால் முடிந்த அளவுக்கு தனித்திறமையை காட்டுகிறார் செல்வராஜ். உதாரணமாக இரண்டு அங்குல உயரமுள்ள மார்பிள் துண்டில் செதுக்கப்பட்டுள்ள நடனமாது சிலையில் கால்களில் உள்ள கொலுசு சுற்றுகிறது. முருகன் சிலையில் உள்ள மயில் முன்புறம் பார்த்தால் முருகனை பார்க்கிறது. பின்னால் இருந்து பார்த்தால் பின்பக்கம் பார்க்கிறது. இதே உயரமுள்ள அர்த்தநாரீஸ்வர் சிலையில் ஆண்பாகம், பெண்பாகம் இரண்டும் அற்புதமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கிறது.

நுணுக்கமான கலையை மட்டுமே சொத்தாக கொண்டிருக்கும் செல்வராஜ் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில்தான் இருக்கிறார். இவரைப் போன்று இக்கலையை செய்கிறவர்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் இந்த கலையை அழிந்துவிடாமல் இருக்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த யாரேனும் விருப்பப்பட்டு தன்னிடம் வந்தால் இதை கற்றுக் கொடுக்கத் தயார் என்கிறார்.

போதுமான வசதிகள் இல்லாத நிலையில் பண்டைக்கால சிற்பங்கள் ஏராளமானவற்றை பாதுகாக்க தவறினோம். ஆனல் தற்போதைய காலகட்டத்தில் இந்த நுண்ணிய சிற்பங்களை பாதுகாக்க வசதியும் நவீன முறைகளும் உள்ளன. எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். திறமையிருந்தும் வறுமையில் வாடும் சிற்பிகள் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x