Last Updated : 19 Nov, 2013 12:00 AM

 

Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

வலிப்பு வரும்போது சாவியை கொடுப்பதால் பயன் இல்லை

வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்று ராஜீவ்காந்தி மருத்துவமனைத் தலைவர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் தேசிய வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு, வலிப்பு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. மருத்துவமனைத் தலைவர் வி.கனகசபை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நரம்பியல் துறைத் தலைவர் கே.தெய்வீகன், பேராசிரியர்கள் கே.பானு, எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்பட்ட வலிப்பு நோயாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வி.கனகசபை பேசியதாவது:

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்

முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதின் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.

இரண்டு மாதமாக வலிப்பு வரவில்லை என்பதால், மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

இந்த மருத்துவமனைக்கு தினமும் 200 முதல் 250 வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 15 பேர் புதிய நோயாளிகள். ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x