Last Updated : 18 Nov, 2013 12:00 AM

 

Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

சச்சின்: இந்தியாவின் செல்லக் குழந்தை

ஆடத் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே மேதை என்னும் பெயரைப் பெறுவது சாதனை என்றால், அந்தப் பெயருடனேயே 24 ஆண்டுகள் ஆடி ஓய்வுபெறுவது அசாத்தியமான சாதனை!

ஒரு தலைமுறையின் ஆதர்சமாக, ஒரு தேசத்தின் கனவு நாயகனாகக் களத்தில் நின்ற சச்சின், இந்திய கிரிக்கெட்டின் முகத்தையும் கிரிக்கெட் போட்டிகள் ஆடப்படும் விதத்தையும் முற்றாக மாற்றியிருக்கிறார். கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலையை உயர்த்தியதில் சச்சினின் மட்டைக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

தொடர்ச்சி அறுபடாத திறன்

தன் கிரிக்கெட் வாழ்வின் முதல் பாதியில், வலுவற்ற அணியின் ஒரே வலிமையாக அவர் விளங்கினார். அடுத்த 10 ஆண்டுகளில் திராவிட், லட்சுமணன், கங்குலி, சேவாக், யுவராஜ், தோனி என்று பலர் தோள் கொடுத்தாலும், இவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆட அவரால் முடிந்தது. சில சமயம், அனைவரிலும் சிறந்து விளங்கவும் முடிந்தது. 2003 உலகக் கோப்பை, 2007 இங்கிலாந்து சுற்றுப் பயணம், 2007-08 ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணம், 2011 தென்னாப்பிரிக்கப் பயணம் ஆகியவை இரண்டாம் பகுதியின் மறக்க முடியாத கட்டங்கள். ஒரு நாள் போட்டியில் 200 ரன்னை அவர் அடித்தபோது அவருக்கு வயது 37.

தனிப்பிறவி

ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஃப்ளிக் முதலான ஷாட்களை எல்லோரும்தான் ஆடுகிறார்கள். ஆனால், இந்த ஷாட்களை ஆடத் தோதுப்படாத பந்துகளையும் இந்த ஷாட்கள் மூலம் எதிர்கொள்வது சச்சினின் சிறப்பு. ஸ்ட்ரெய்ட் டிரைவில் அவரது காலப் பரிமாணம் மூச்சை நிறுத்தும் அளவுக்குத் துல்லியமானது. தடுப்பாளர்களுக்கு இடையில் பந்தைச் செலுத்தும் திறனும் லேட் கட்களை ஆடும் விதமும் கவித்துவமான அழகு கொண்டவை.

வேகப்பந்துகளுக்கு எதிரான உத்தி

வேகப் பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாதபோது ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டையாளரின் பொறுமையைச் சோதிப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். பந்து வீசப்படும் வரிசையிலும் அளவிலும் துல்லியம் கூட்டி மட்டையாளரைச் சோதிப்பார்கள். ஆனால், அந்த உத்தி சச்சினிடம் பலிக்கவில்லை. மிடில், ஆஃப் ஸ்டெம்ப் வரிசையில் நல்ல அளவில் வீசப்பட்டு, இடுப்புக்கு மேல் எழுந்து வரும் பந்துகளைப் பிறரைப் போல் தடுத்து ஆடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. சட்டென்று பின்காலில் சென்று மட்டையின் மேற்பகுதியால் பந்தை எதிர்கொண்டு, கவர் திசையில் பந்தை அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்டுவார். வழக்கமாக மற்றவர்கள் முன்னால் வந்து தடுத்து ஆடும் பந்துகளை முன்னால் வந்து தாக்குவார். தாக்குவது என்றால், மட்டையை ஓங்கி அடிப்பது அல்ல. பந்தை எதிர்கொள்ளும் இடத்திலும் நேரத்திலும் சிறிய, ஆனால் நுட்பமான மாற்றத்தைச் செய்தார். அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இதை நம்ப முடியாமல் வியந்து பார்த்தார்கள். 1990-களின் தொடக்கத்தில் ஓல்டு ட்ரஃபோர்டிலும் பெர்த்திலும் சச்சின் அடித்த சதங்களில் இதைக் காணலாம்.

அந்நிய மண்ணில்…

கவாஸ்கர், திராவிட் ஆகிய இருவரும் அந்நிய மண்ணில் சிறப்பாக ஆடிய இரு பெரும் மட்டையாளர்கள். ஆனால், இவர்கள் இருவரை விடவும் சச்சினின் திறமை ஒரு படி மேலே என்றுதான் சொல்ல வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது கவாஸ்கர் எப்போதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை. திராவிடும் எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் அல்ல. தவிர, தென்னாப்பிரிக்காவில் அவர் சோபித்ததில்லை. சச்சின் எல்லா நாடுகளுக்கு எதிராகவும் பிரகாசித்திருக்கிறார். தன் காலகட்டத்தின் சிறந்த பந்து வீச்சு அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பல சாதனைகள் புரிந்திருக்கிறார்.

1998-ல் ஷார்ஜாவில் மணற்புயலுக்கு மத்தியில், தனியனாக நின்று போராடிய அந்தக் காட்சி சச்சினுடைய கிரிக்கெட் வாழ்வின் குறியீடு என்று சொல்லலாம். கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேனை அசத்திய தருணமும் அதுதான்.

தடைகளைத் தாண்டி...

காயங்கள், வயது, புதிய பந்து வீச்சாளர்கள் எனச் சவால்கள் அதிகரிக்கும்போதெல்லாம் தன் ஆட்டத்தில் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்து மெருகேற்றிவந்தவர் சச்சின். எதிரணியினர் இவருக்கு எகிறு பந்துகளை அதிகம் வீசினால், இவர் அப்பர் கட் ஷாட்டை அதிகம் பயன்படுத்துவார். சுழலர்களுக்கு எதிராக பெடல் ஸ்வீப் போன்ற புதிய ஷாட்களை உருவாக்கினார்.

சச்சின் ஆடும்போதெல்லாம் இந்தியாவில் பலருக்கு வாழ்க்கை ஸ்தம்பித்துப்போகும். “உஷ்… பேசாதே, சச்சின் ஆடுகிறார்” என்ற வார்த்தையை வீடுகளில் சகஜமாகக் கேட்கலாம். சச்சின் சதம் அடித்தால் பிரகாசிக்கும் முகங்களைக் கோடிக் கணக்கில் பார்க்கலாம். அவர் சீக்கிரமே அவுட் ஆனால், இருண்டுபோகும் முகங்களையும் பார்க்கலாம். சச்சின் இந்தியாவின் செல்லக் குழந்தை.

டென்னிஸ் எல்போ போன்ற மிக வேதனையான உடல் காயங்கள் தவிர, மனதளவிலும் நிறைய காயங்கள், கடும் நிர்ப்பந்தங்கள். 2006-07 ஆண்டுகளில் அவர் விரைவில் அவுட் ஆகிக்கொண்டிருந்த சில சமயங்களில், ஆளுக்கு ஆள் அவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். எப்படிக் காலை நகர்த்த வேண்டும் என்றெல்லாம் அந்த மேதைக்குப் பாடம் எடுத்தார்கள். அவரது சொந்த ஊரான மும்பையில் ஒரு டெஸ்டில் இந்தியாவை வெற்றிபெற வைக்க அவரால் முடியாமல்போனபோது, ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். மனதிலும் உடலிலும் பட்ட இத்தனை காயங்களையும் தாண்டி வந்ததுதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் பயணம். இன்று, அதே மும்பை அவருக்குக் கண்ணீருடன் பிரியா விடை தருகிறது.

இனி, அந்த ஸ்ட்ரெய்ட் டிரைவைப் பார்க்க முடியாது. வீச்சாளர்களின் அஸ்திரங்களையும் தடுப்பாளர்களின் சாகசங்களையும் பலவீனப்படுத்தும் மேதமையைக் காண முடியாது. சச்சினின் சில சாதனைகள் ஒரு நாள் முறியடிக்கப்படலாம். ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் என்றும் மறையாது.

தொடர்புக்கு: aravindanmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x