Last Updated : 22 Nov, 2013 12:00 AM

 

Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

எல்லா வயதினருக்கும் பொருந்தும் ‘பெரிஸ்’!

அறுவைச் சிகிச்சையின்போது எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும்வகையில் சீராகவும், எளிதில் கையாளக் கூடியதுமான பிராணவாயு செலுத்தும் புதிய கருவி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம். பெரியசாமியால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது குறைந்த விலையில் விற்பனைக்கும் வந்துள்ளது.

2013 ஜூலை 30-ல் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரால் சிறந்த மருத்துவருக்கான விருதைப் பெற்றிருக்கும் மருத்துவர் பெரியசாமி, தமிழக மருத்துவர்கள் சார்பில் சார்க் மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.

தமது கண்டுபிடிப்பு குறித்து அவர் தி இந்து நிருபரிடம் கூறியதாவது:

“அறுவைச் சிகிச்சை அரங்குக்குள் நோயாளியின் அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்கிறதா, எந்த உறுப்பிலாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அளவிடுவோம். இதை அடிப்படையாகக் கொண்டுதான், நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மயக்க மருந்தின் அளவு, செயற்கை சுவாசத்தின் அளவு போன்றவை முடிவு செய்யப்படும்.

அறுவை அரங்கில் பிராணவாயுவைக் கொடுக்க நோயாளியின் வயதுக்கேற்ப கருவியை உபயோகிக்க வேண்டி இருந்தது. குழந்தைக்கு, சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு தகுந்தாற்போல் கருவியில் பிராணவாயு வெளிப்படுத்தும் திறனைக் கூட்டிக் குறைத்து பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால் அறுவைச் சிகிச்சை நேரத்தில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுவதோடு, நோயாளியின் ரத்த அழுத்தம் போன்றவைகளை அளப்பதிலும் சிரமம் இருந்தது. அதுமட்டுமின்றி ஒரு கருவியின் விலை ரூபாய் 1000 வரை இருந்தது. குழந்தை, இளைஞர், முதியோருக்கென தனித்தனியாக இந்தக் கருவியை வாங்கவேண்டும்.

பல வயது நிலைகளில் இருப்போருக்கும் ஒரே கருவியில் பிராணவாயு செலுத்தும் கருவியை உருவாக்கும் எண்ணம், 1994-96-ம் ஆண்டுகளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றியபோது தோன்றியது. அங்கிருந்தே இதற்கான பணியைத் தொடங்கினேன். கண்டுபிடிப்புக்குத் தேவையான கருவிகளும், வசதிகளும் அந்த மருத்துவமனையில் இருந்ததால், கருவியை வடிவமைப்பதற்கு எளிதாக இருந்தது.

பலமுறை தோல்விகளுக்குப் பின், என்னுடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இதைப் பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்ததால், இதுகுறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை, கொச்சியில் 1999-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்திய அளவிலான கருத்தரங்கில் சமர்ப்பித்தேன். அதன்பிறகு, மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகி கருவியும் தயாரிக்கப்பட்டது. பெரியசாமி என்னும் எனது பெயரின் தொடக்கமாக “பெரிஸ்” என்ற பெயரில், 2010-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கருவிக்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வயது நிலையில் இருப்பவருக்காகவும் தனித் தனியாக ரூ.1000-த்துக்கு வாங்கப்பட்ட பிராணவாயு செலுத்தும் கருவிக்கு மாற்றாக, பெரிஸ் ரூபாய் 600-க்கு, எல்லா வயதில் இருப்பவர்களுக்கும் பயனடையும் வகையில் கிடைக்கிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயன்படும் இந்தக் கருவியால் அறுவை அரங்கில் இருக்கும் நோயாளிக்கு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசித்தலில் சிரமம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது. குழந்தை, இளமை மற்றும் முதுமைப் பருவத்தில் உள்ளோருக்கு இதன்மூலம் செலுத்தப்படும்போது பிராணவாயு சீராகச் செல்கிறது.

இதை தற்போது தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்துகின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதைப் பயன்படுத்தலாம்” என்றார் பெரியசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x