Last Updated : 18 Nov, 2013 12:00 AM

 

Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

சென்னை அரசு மருத்துவமனை வார்டுகளில் இணைப்பை துண்டித்து அம்மா உணவகத்துக்கு தண்ணீர் சப்ளை

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சில வார்டு களில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அம்மா உணவகத்துக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புகார் எழுந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களைத் தவிர நோயாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் என தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் மருத்துவமனைக்குள் வந்து செல்கின்றனர்.

தற்போது ஏழை-எளிய நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் திறந்து வைக்க உள்ளார். அம்மா உணவகத்துக்கு தேவையான மின்சாரத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், எய்ட்ஸ் ஆலோசனை மையம் மற்றும் பால்வினை நோய் துறை கட்டிடத்தில் இருக்கும் தண்ணீர் இணைப்பைத் துண்டித்து, அம்மா உணவகத்துக்கு சப்ளை திருப்பி விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

“வார்டுகளில் தண்ணீர் வராததால் வெளியில் இருந்து குடிநீரை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். தண்ணீர் இணைப்பு இல்லாததால், இந்த கட்டிடத்தில் உள்ள 4 கழிப்பறைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பறையையே பயன்படுத்த வேண்டியுள்ளது” என்று நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் வி.கனகசபை கூறியதாவது:

அம்மா உணவகம் கட்டும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. அப்போது, வார்டுகளில் உள்ள தண்ணீர் இணைப்பு, அம்மா உணவகத்துக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின், வார்டுகளுக்கும் தவறாமல் தண்ணீர் கொடுத்து வருகிறோம். அங்கு தண்ணீர் வராததற்கு வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக இருக்கும். குறை இருந்தால் அது விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

எய்ட்ஸ் ஆலோசனை மையம் மற்றும் பால்வினை நோய் துறை கட்டிடத்தின் புறநோயாளிகள் பிரிவு நுழைவாயில் உள்ளே மறைவான சிறிய இடம் உள்ளது. இந்த இடத்தில் சமூக விரோதிகள் சிலர் பெண்களுடன் வந்து இரவு நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். “இதைப் பற்றி புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x