Published : 04 Mar 2014 03:30 PM
Last Updated : 04 Mar 2014 03:30 PM

வேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி?

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் பார்வையில், நம் மீதான நன்மதிப்பு குறையும்.

இ-மெயில் முகவரியில் நம்பர், குறியீடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பல நிறுவனங்களில் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்க ஸ்பேன் ஃபில்டர் பயன்படுத்துகின்றனர். இதனால் எண், குறியீடுகளுடனான இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பும் மெயில்கள் சென்று சேராமல் இருக்க வாய்ப்புள்ளது. நம் மீதான முதல் பார்வையே நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால், தொழில் ரீதியாக இ-மெயில் முகவரியை வடிவமைத்து வைத்துக்கொள்வது நல்லது.

பணிக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை, பணி சார்ந்த தகவல்கள் என்பது போன்ற முக்கிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு, அந்நிறுவன இணையதளத்துக்கு சென்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். படித்த கல்வி நிறுவனம் பற்றிய தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடன் கொண்டு செல்லும் ரெஸ்யூம் முக்கிய அம்சம். படிப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். சுய அறிமுகம், படித்த படிப்புகள், தெரிந்துவைத்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ரெஸ்யூம் 2 பக்க அளவிலும், வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடியவரின் சுய திறமை குறித்த தகவல்கள் 20 பக்கம் வரையும் இருக்கலாம். அதில் முழுமையான விவரங்களுடன் கூடிய சுய அறிமுகம், தனித்திறமைகள், படிக்கும்போது செய்த சாதனைகள் என சகலவிதமான தகவல்களையும் அளிப்பதன் மூலம், பணிக்கு கூடுதல் வாய்ப்புண்டு.

ஆடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பென்சில்பிட், லோ-ஹிப் பேன்ட், ஷார்ட் சுடிதார், ஜிகினா, கண்ணாடி, பூ வேலைப்பாடு ஆடைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் விஷயத்துக்காக ஒரு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வில் 50 பேரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபார்மல் சுடிதார், பிளெய்ன், ஸ்டிரெய்ப்டு என பெண்கள் ஆடை விஷயத்தில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து மடித்துவிடுவது கூடாது. பலருக்கு டை கட்டத் தெரிவதில்லை. பேன்ட் பக்கிள்ஸ் வரை டையின் நுனிப்பகுதி இருக்க வேண்டும். ஃபார்மல் பேன்ட், சர்ட் அணிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆடையில் அலங்காரத்தை காட்டுவதைவிட நேர்த்தியை, தூய்மையைக் காட்டுவது அவசியம். மற்ற நடைமுறைகளைப் பற்றி நாளை தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x