உலகம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு எந்நேரமும் தயார்: அமெரிக்கா

செய்திப்பிரிவு

ஈரானுடான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் பாம்பியோ கூறும்போது, “ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்நேரமும் தயாராக இருக்கிறது. ஆனால், ஈரானின் நடத்தையில் மாற்றம் தேவைப்படுகிறது. அதுவரை ஈரான் மீதான அழுத்தங்கள் தொடரும். இது வெறும் பொருளாதார ரீதியிலான அழுத்தம் மட்டுமல்ல. இதன் மூலம் ஈரான் தனிமைப்படுத்தப்படுகிறது” என்றார்.

பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் என்றும் அடி பணியாது என்று ஈரான் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

மேலும், அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதால் அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளையும் அந்நாட்டின் மீது விதித்து வருகிறது.

தவறவீடாதீர்!

SCROLL FOR NEXT