

சிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில் அரசுப் படைகள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தன.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, “கடந்த நான்கு நாட்களாக சிரியாவிலிருந்து சுமார் 43,000 பேர் சண்டை நடந்து கொண்டிருக்கும் மேற்கு அலெப்போவிலிருந்து வெளியேறியுள்ளனர். சிரியாவின் பனி படர்ந்த முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மிச்செல்லா கூறும்போது, “சிரியாவில் உள்ள எந்த முகாமிலும் தற்போது பாதுகாப்பில்லை. அரசுப் படைகள் தங்கள் அத்துமீறல்களைத் தொடர்ந்து வருகின்றன. மக்கள் இன்னும் அதிகமாகக் கொல்லப்படுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தவறவீடாதீர்