

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கேள்வி எழுப்பினார். காற்று மாசைக் குறைக்கவும், அரசின் வாகனங்கள், பொதுப் பயன்பாடு வாகனங்கள் ஆகியவற்றை படிப்படியாக மின்னணு வாகனங்களாக, ஹைட்ரஜன் வாகனங்களாக இயக்கும் திட்டம் குறித்த வழக்கில் நீதிபதி பாப்டே இவ்வாறு கேட்டுள்ளார்.
டெல்லியில் காற்று மாசைக் குறைப்பதற்கு முதலில் மத்திய அரசின் வாகனங்கள் அனைத்தையும் மின்னணு வாகனங்களாகவும், ஹைட்ரஜன் வாயுவில் செயல்படும் வாகனங்களாகவும் மாற்ற உத்தரவிட வேண்டும். மின்னணு வாகனக் கொள்கையைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஏஎன்எஸ் நட்கர்னி ஆஜரானார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி பாப்டே பேசுகையில், "மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து காற்று மாசைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், திட்டம், மின்னணு வாகனங்களை இயக்கும் திட்டம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கலாமே. இதைச் சம்மன், குற்றச்சாட்டு என எடுக்க வேண்டாம்.
டீசல், பெட்ரோல் வாகனங்களில் இருந்து முழுமையாக மின்னணு வாகனத்துக்கு மாறுவதற்கு என்ன விதமான செயல்திட்டம் இருக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள நீதிமன்றம் விரும்புகிறது. அதை அமைச்சர் தெரிவிப்பார் என விரும்புகிறோம்.
சிஎன்ஜி வாயுவில் இயங்கும் வாகனங்கள், மின்னணு வாகனங்கள் குறித்து உங்கள் அமைச்சர் அடிக்கடி விளக்கங்கள் அளிக்கிறார். அதனால் அவர் மூலம் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே" எனத் தெரிவித்தார்.
அதற்குக் கூடுதல் சொலிசிட்டர் நட்கர்னி பதில் அளிக்கையில், " நீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் வந்தால் அரசியல் பார்வையில் தவறான கண்ணோட்டமாகக் கருதப்படும்" எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி பாப்டே பேசுகையில், "அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என நீங்கள் கருதினால், மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப எங்களால் பதில் அளிக்க முடியாது. அமைச்சருடன் மனுதாரர் வழக்கறிஞர் வாதிடப்போவதில்லை. நாங்கள் அமைச்சருக்கு சம்மன் அனுப்பவில்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம்" என்று தெரிவித்தார்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, "சுத்தமான எரிபொருள் குறித்த முழுமையான அறிக்கையை அரசு முதலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறது" எனத் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பாப்டே பேசுகையில், " சுற்றுச்சூழல் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தீபாவளி என்று பட்டாசு வெடிப்பது தொடர்பாகக் கூட வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், வாகனப் புகை மாசு நாள்தோறும் ஏற்படுகிறது. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. வாகனப் புகை, மாசு குறைக்கப்பட்டால், காற்றில் கலக்கும் மற்ற நச்சுப்பொருட்கள் அளவு கணிசமாகக் குறைந்துவிடும். இந்த காற்று மாசு பிரச்சினை டெல்லியில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் இருக்கிறது.
மின்னணு வாகனங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவரும் வழக்கு ஏராளமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதை நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்கு அமைச்சர் ஆக்கபூர்வமான முறையில் உதவ முடியாது என்று தெரிவித்தால், அதற்கு யார் பொறுப்பானவர்கள் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கில் அடுத்த 4 வாரங்களில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டார்.