தமிழகம்

“சங்கிகள் ஊடுருவலை தடுக்கும் ஆற்றல் எங்கள் தலைவருக்கு உண்டு!” - விசிக ரவிக்குமார் விறுவிறு நேர்காணல்

குள.சண்முகசுந்தரம்

ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு என கூட்டணிக் கட்சிகள் இம்முறை திமுக-வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்து வரும் நிலையில், “அதிகாரத்தில் பங்கு கேட்கும் வாய்ப்பு 2026 தேர்தலில் இல்லை” என்று அண்மையில் கருத்துச் சொல்லி இருந்தார் விசிக பொதுச்செயலாளர் து.ரவிக்குமார். இது தொடர்பாக ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் சாத்தியமா?

நிச்சயமாக. ஏனென்றால் 2001 தேர்தலிலேயே திமுக கூட்டணியில் நாங்கள் 10 இடங்களில் போட்டியிட்டோம். கடந்த 25 வருடங்களில் கட்சி பல மடங்கு வளர்ந்திருக்கிறது. கடந்த முறை சூழ்நிலை காரணமாக தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டோம். ஆனால், இப்போது அப்படியான சூழல் இல்லை. எனவே, திமுக இதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிகாரத்தில் பங்கு கேட்கும் வாய்ப்பு 2026 தேர்தலில் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களே..?

அது எங்கள் தலைவர் முன்னமே சொன்னது தான். ஒரு வலிமையான கட்சி பலவீனமடைந்து போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்ல முடியாது என்கிற சூழல் ஏற்படும் போதுதான் இது மாதிரியான பேச்சுகள் வரும். ஆனால், அது மாதிரியான சூழலில் திமுக இப்போது இல்லை; வலுவுடன் இருக்கிறது. அதனால் அதிகாரப் பகிர்வுக்கான வாய்ப்பு இந்தத் தேர்தலில் இருக்காது என்கிறோம்.

அதிகாரத்தில் பங்கு மனநிலையில் தொண்டர்கள் இருக்கையில் தலைவர்கள் நீங்கள் இப்படி பேசுவது முரண்பாடாகாதா?

அப்படிக் கிடையாது. தலைவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் தொண்டர்கள் கேட்பார்கள். ‘மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தது திமுக. ஆனால் 2016-லேயே, ‘மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தது விசிக. ஆனால், அதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என்பதைத்தான் தலைவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதை எல்லாம் கூட்டணி தலைமையிடம் நேரடியாகப் பேசாமல் பொதுவெளியில் பேசி பிரளயம் கிளப்புவது சரியான அணுகுமுறையா?

யார் அப்படிப் பேசியது? கட்சிக்குள் பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அதைக் கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்சியின் நிலைப்பாடு என்றால் அது தலைவர் சொல்வது தான்.

வைகோ மூலம் 2016-ல் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியதே ஜெயலலிதா தான் என்பது போல் மல்லை சத்யா சொல்கிறாரே..?

இதற்கு வைகோ தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், மக்கள் நலக் கூட்டணியை இடதுசாரிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைத்தது விசிக தான். அதன் பிறகு தான் வைகோ, வாசன், விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் உள்ளே வந்தார்கள். ஆக, அந்தக் கூட்டணி உருவானதில் மையமான பங்கு எங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் தான். அதன் பிறகு கூட்டணிக்கு வந்தவர்கள், அதற்காக வந்தார்கள்... இதற்காக வந்தார்கள் என்று இப்போது பல காரணங்களைச் சொல்லலாம்.

செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்திருக்கிறாரே..?

இன்னும் ஒரே வாரத்தில், “அமித் ஷா தான் என்னை அங்கே போகச் சொன்னார்” என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரிந்துபோனவர்களை ஒற்றுமைப்படுத்தப் போவதாகச் சொன்னார். அதற்கு பெரிதாக இம்பேக்ட் இல்லை. உடனே, “அமித் ஷா தான் என்னை இப்படிப் பேசச் சொன்னார்” என்றார். அதிமுக-வை ஒருங்கிணைக்கப் போவதாகச் சொன்னவர், ஒரே மாதத்தில் இன்னொரு கட்சியில் போய் சேர்கிறார் என்றால் இது அவரது சொந்த நிலைப்பாடாகத் தெரியவில்லை.

விசிக-வுக்குள்ளும் சங்கிகள் ஊடுருவிவிட்டதாக சிறுத்தைகளை தமிழிசை பயமுறுத்துகிறாரே?

எல்லாக் கட்சிகளிலும் ஊடுருவியதைப் போல விசிக-வுக்குள்ளும் ஊடுருவுவதாக அவர்களே சொல்கிறார்களா..? கோவிட் வைரஸ் பரவிய போது அனைவரும் முகக் கவசம் அணிந்து கொண்டோம். அந்த வைரஸ் இவர்களை தாக்கும்... அவர்களைத் தாக்கும் என்று யாராலும் சொல்ல முடிந்ததா? நாம் தான் நம்மை தற்காத்துக் கொண்டோம். இன்றைக்கு தமிழகத்தில் பெரும்பகுதி மக்கள் பாஜக-வை ஏற்க மறுப்பதற்குக் காரணம் விசிக. அதற்குள்ளே சங்கிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என்றால் அதைத் தடுக்கும் ஆற்றல் கட்சிக்கும் எங்கள் தலைவருக்கும் இருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க திமுக அமைச்சர்கள் தொடர்பான ஊழல்களை வரிசையாக எடுத்துவிடுகிறதே பாஜக..?

அண்ணாமலை வந்தபோதே, ‘திமுக ஃபைல்ஸ்’ வெளியிட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராகவே நிறையப் புகார்கள் வெளியானது. எப்போதுமே பாஜக தனது எதிரிகள் மீது இது மாதிரியான குற்றச்சாட்டுகளை சொல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதன் நோக்கம் என்னவென்று மக்களுக்குத் தெரியும்.

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் முதல்வரின் தூக்கத்துக்கு சவாலாக இருப்பதை உணர்கிறீர்களா..?

அப்படி நான் நினைக்கவில்லை. ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பதாக உங்களால் சொல்லமுடியுமா?

தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறதே...

விசிக-வை ‘விழுப்புரம் - சிதம்பரம் கட்சி’ என ஹெச்.ராஜா போன்றவர்கள் விமர்சிக்கிறார்களே..?

நாகை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களிலும் எங்களுக்கு எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். பாஜக-வை விட கூடுதலாக வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்கும் ஆற்றல் பெற்ற கட்சி விசிக. இதை அவர்களால் மறுக்க முடியுமா? எங்களுக்காவது இரண்டு எம்.பி.க்கள் இருக்கிறோம். ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஏன் இங்கே அவர்களால் ஒரு எம்.பி.யைக் கூட பெறமுடியவில்லை என்று முதலில் யோசிக்கட்டும்

SCROLL FOR NEXT