“60 நாளில் அரைமணி நேரமே அரசியல் பேசிய அமெரிக்க மாப்பிள்ளை!” - விஜய்யை விளாசும் சாட்டை துரைமுருகன் நேர்காணல்
தமிழக அரசியலில் சற்றே வித்தியாசமாக மனிதர்களுக்கு மட்டுமல்லாது, ஆடு - மாடு, மரம், மலை, காடு, கடல் என இயற்கை வளங்களுக்கும் சேர்த்து மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறது நாதக. அதனூடாக அரசியல் கருத்துகளையும் ஆணித்தரமாகப் பேசிவரும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ‘சாட்டை’ துரைமுருகனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
உங்களின் ‘சாட்டை’ சேனலுக்கும் நாதக-வுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன பிறகு, சேனலில் ஆளும் கட்சியை விமர்சிப்பது சவாலாக இருக்கிறதா?
திமுக எம்.பி.யின் சகோதரர் ஒரு தொலைக்காட்சி நடத்துகிறார். அதற்கும் திமுக-வுக்கும் தொடர்பில்லை. அதுபோல, நான் ஒரு ஊடகத்தை உருவாக்கி சமூக அநீதிகளை, அரசியலைப் பேசுகிறேன். ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வரும்போது நெருக்கடிகள், கொலை மிரட்டல் எல்லாம் இன்றைக்கும் இருக்கத் தான் செய்கின்றன. அதைத்தாண்டி உண்மையை சொல்லவேண்டிய தேவை இருக்கிறதே.
ஆளும் கட்சியான திமுக-வை விமர்சிப்பதால் மட்டுமே நாதக வாக்கு வங்கி உயர்ந்துவிடுமா?
நாங்கள் வெறும் விமர்சனத்தை மட்டும் வைக்கவில்லை. நாதக என்ன செய்யப் போகிறது என்ற தீர்வையும் சொல்கிறோம். முல்லை பெரியாறு, கச்சத்தீவு, காவிரி பிரச்சினை, ஊழல் ஆகியவற்றை தீர்ப்பது கூட அசாத்தியமானதுதான். என்றாலும் அதையும் சாத்தியப்படுத்த ஓர் ஆள் தேவை. அந்த வகையில், பிரச்சினைக்கான தீர்வையும் நாதக முன்வைக்கிறது.
நாதக நடத்தும் இயற்கை வளங்கள் சார்ந்த மாநாடுகள் எல்லாம் 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மக்களுக்கு நீர், நிலம், கடல், காடு ஆகியவை தேவை. அதன் அடிப்படையில் தான் ஆடு-மாடு மாநாடு, மரங்களின் மாநாடு, கடலம்மா மாநாடு என 5 மாநாடுகளை நடத்தியுள்ளோம். இந்த மாநாடுகள் வெறும் அரசியல் அல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறோம் என்பதற்கான டிரைலர் தான் இவை.
மக்கள் பிரதிநிதிகள் இன்றி, வெறும் அரசியல் பயிற்சி களமாகவே நாதக இருக்கிறதே... நாதக எப்போதுதான் அதிகாரத்துக்கு வரும்?
திமுக எடுத்தவுடனேயே அதிகாரத்தை அடைந்துவிடவில்லை. அதற்கு 18 ஆண்டுகள் தேவைப்பட்டன. இப்போது, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்தான் வாக்களிப்போம் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள். அப்படியெல்லாம் பணம் கொடுக்காமல் 36 லட்சம் வாக்குகளை நாதக வாங்கியிருப்பதே மிகப்பெரிய சாதனை. 2026 தேர்தலில், திமுக-வின் இப்போதைய மோசமான ஆட்சியே நாதக வளர்ச்சிக்கு உதவும்.
காளியம்மாள் உள்ளிட்ட தீவிர களமாடிகள் பலரும் கட்சியைவிட்டுச் சென்றது நாதக-வுக்கு பின்னடைவு இல்லையா?
எந்தவொரு இயக்கமும் தனிப்பட்ட நபரை நம்பி உருவாக்கப் படுவதில்லை. செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் போன்றோர் வெளியேறியதால் அதிமுக பின்தங்கி விட்டதா? ஒரு இயக்கம் வளரும் போது சிலர் வருவார்கள்; சிலர் போவார்கள். அதையெல்லாம் தாண்டி நாதக காலத்தின் தேவையாக இருக்கிறது.
மாற்றுக்கட்சி இளைஞர்களை கட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுக-வினரை உசுப்புகிறாரே உதயநிதி ஸ்டாலின்..?
விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் போனாலும், நல்ல அரசியலை விரும்பக் கூடியவர்கள், மாற்றத்தை விரும்பக்கூடிய இளைஞர்கள் நாதக-வுக்கு வருவார்கள். உதயநிதி ஸ்டாலின் ஒரு சுகமான சூழலில் வளர்ந்த தலைவராக மட்டுமே இருக்கிறார். அவருக்கு ஏழைப்பட்ட இளைஞர்களின் வலியோ, கஷ்டமோ தெரியாது. கத்திரிக்காய், தக்காளி விலை கூட அவருக்குத் தெரியாது. பிறகு எப்படி அவர் தலைவராக இருக்க முடியும்? இளைஞர்களை ஈர்க்கும் திறன் சீமானுக்கு மட்டுமே இருக்கிறது.
சீமானை தினகரன் பெரிதாக சீண்டாத போது அமமுக-வினர் எதற்காக உங்களது வீட்டை முற்றுகையிட்டனர்?
செங்கோட்டையன் தேவருக்கு மரியாதை செலுத்தச் சென்ற விவகாரத்தை டிடிவி.தினகரன் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தியது அரசியல் நிகழ்வு. அதைப்பற்றி நான் பேசியபோது கொலை மிரட்டல் விடுத்தனர். அதைத் தொடர்ந்தே, “சசிகலாவின் அக்காள் மகனாக மட்டும் இல்லையென்றால் டிடிவி.தினகரன் யார்? ஜெயலலிதா மறையும் வரை அவரால் போயஸ் கார்டனுக்கே வரமுடிய வில்லையே” என்று பேசினேன். இந்த உண்மை அவர்களுக்கு வலித்திருக்கிறது.
விஜய்யால் உங்களின் வாக்கு வங்கி சுரண்டப்படும் என்பதால் தான் அவரை கடுமையாக விமர்சிக்கிறீர்களா?
எந்தப் போராட்டக் களத்துக்கும் வராமல், 60 நாட்களில் அரை மணி நேரம் மட்டும் அரசியல் பேசி, ஒரு அமெரிக்க மாப்பிள்ளை போல நேரடியாக முதல்வர் ஆவேன் என்கிறார் விஜய். எங்கு கூட்டம் போட்டாலும் அவரது கட்சியினர், அனைத்தையும் அடித்து உடைத்து விடுகின்றனர். ஒரு பிரச்சினை நடக்கும்போது, ஒட்டுமொத்தக் கட்சியினரும் 15 நாட்கள் செல்போன்களை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அரசு மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் ஒருவர், நாளை ஆட்சிக்கு வந்தால் எப்படிச் செயல்படுவார்? அப்படியான ஒரு தவறான அரசியல் தமிழகத்தில் கட்டமைக்கப்படக் கூடாது.
முன்பு திமுக-வை விமர்சித்த கமல்ஹாசன் பிற்பாடு அறிவாலயம் நோக்கித் திரும்பியது போல் விஜய்யும் திமுக பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறதா?
நான் ஜோசியம் சொல்ல முடியாது. கமல்ஹாசன் நல்ல மனிதர், ஆனால், அவரது அரசியல் பாதை தவறானது. விஜய் இயல்பிலேயே நல்லவர் கிடையாது. எனவே அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. விஜய்யின் அரசியல் திமுக-வின் இன்னுமொரு சினிமா வெர்ஷனாகத் தான் தெரிகிறது. அவர் திமுக-வுடன் சேருவாரா என்று தெரியவில்லை. ஆனால், அவரது அரசியல் 2026-உடன் முடிவுக்கு வரும்.
திமுக அரசை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என்கிறாரே பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன்?
தேசியக் கட்சியுடனோ திராவிடக் கட்சியுடனோ ஒருபோதும் கூட்டணி கிடையாது. எங்களுக்கு கூட்டு, பொரியல் என்பது சாப்பாட்டில் மட்டும்தான்; அரசியலில் இல்லை. நாங்கள் ஒருபோதும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்களுக்கான வாக்கு வங்கி 20 சதவீதத்தைத் தாண்டும்போது நாதக தலைமையில் வேண்டுமானால் ஒரு கூட்டணியை உருவாக்குவோம்.
