சென்னை: “டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இன்று (20.09.2026) சென்னை வள்ளுவர் கோட்ட கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 8-வது மாநில மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருடன் கலந்து கொண்டேன். இந்த மாநாட்டில் செவிலியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.
செவிலியர்கள் மருத்துவக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக பங்காற்றுகிறார்கள். ஒரு மருத்துவமனையின் மூளையாக மருத்துவர்கள் இருந்தாலும், செவிலியர்கள் இதயத்திலிருந்து நோயாளிக்கு அன்பும், அரவணைப்பும் கொடுத்து தேவையான மருத்துவப் பராமரிப்பை கொடுக்கிறார்கள்.
அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளார்கள். அரசு அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, கூடிய விரைவில் அவர்களை அழைத்துப்பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய செவிலியர் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே பிஎஸ்சி நர்சிங் படித்து, அரசு மருத்துவமனைகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த எம்எஸ்சி நர்சிங் படித்தவர்ககளை செவிலியர் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தகுதி அடிப்படையில் அவர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. 2023-ல் மொத்தம் 56,863 பாதிப்புகள் இருந்தன. 2024-ல் 46,971 பாதிப்புகள். 2025-இல் 25,585 பாதிப்புகள் இருந்தன. இந்த ஆண்டில் இதுவரை 17,049 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
எனினும், அரசு அலட்சியமாக இல்லை. போதுமான கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று மழைநீர் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதற்காகத் வழிகாட்டுதல்களும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து முதல்வர் மருத்துவத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத்துறை போன்ற அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தேங்ககூடிய வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆய்வுக்கு சென்றபொழுது பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேவையற்ற பொருட்கள் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என தெரியவந்தது.
டெங்கு கொசு கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கைகளில் தடவப்படும் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வருகின்ற அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அல்ல. அது 'உண்ணிக் காய்ச்சல்' எனப்படும் 'ஸ்கரப் டைபஸ்' பாதிப்பால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இதன் அறிகுறிகள் டெங்கு போன்றே காய்ச்சல், தலைவலி, வாந்தி என இருக்கும். பூச்சி கடிக்கும் இடத்தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்கும். 2025-இல் 5,142 ஸ்கரப் டைபஸ் பாதிப்புகள் பதிவாகின. இந்த ஆண்டில் இதுவரை 4,619 பாதிப்புகள் உள்ளன.
செடிகள் அதிகம் உள்ள பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது கை, கால்களை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவது நல்லது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். இது குறித்துப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.