திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டதை மறக்க இயலாது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று (பிப்.18) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சிஏஏவை எதிர்த்து முஸ்லிம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துப் பேசியதாவது:
"தமிழகத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய இன்னல் கூட நேராத வகையில் முழுமையான பாதுகாப்பை அதிமுக அரசு வழங்கி வருகிறது.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தபோது, பலர் உயிர்கள் மாண்ட நிலையில், திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்பட்டனர் என்பதை மறக்க முடியாது. முஸ்லிம்கள் கன்னியத்துடனும், மரியாதையுடனும் பார்க்கப்படும் நிலையில், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில்தான் தமிழக அரசின் நடவடிக்கைகள் இருக்கும். இந்தச் சட்டங்களால் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, நான் டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கினேன். அந்தக் கடிதத்தை வெளியிட முடியுமா என, திமுக கூக்குரலிட்டது. நாங்கள் அந்தக் கடிதத்தை இப்போது வெளியிட்டு விட்டோம்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தவறவிடாதீர்