

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடக்கிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக் கப்படும் என தெரிகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப் 9-ம் தேதி நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
பேரவை கூட்டத்தொடரில்..
அதன் அடிப்படையில், தற்போது நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவை நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடுகிறது. இக்கூட்டத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக முஸ்லிம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.