கேஜ்ரிவால் உடன் ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்களால் வெல்ல முடியும்: கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்.11) எண்ணப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி, 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பகள் அனைத்தும் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்து இருந்தன.

இந்தநிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விடவும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது.

நண்பகல் நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளதால், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்.

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்களால் வெல்ல முடியும் என்பது டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

நம் நாட்டின் நலனுக்காக, கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT