

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
இந்தத் தேர்தலில் கேஜ்ரிவாலின் வெற்றிக்கு அவரது அரசின் குறிப்பிடத்தக்க சாதனை என்பது மொஹல்லா கிளினிக் திட்டம். டெல்லி மக்களுக்குச் செலவில்லாமல் மருத்துவ வசதி தரும் சமுதாய ஆரம்ப சுகாதார மையம்.
இந்த அரசு மருத்துவ மையங்கள் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. பல்வேறு சர்வதேச தொண்டு அமைப்புகளும் இந்தத் திட்டத்தைப் பாராட்டியுள்ளன.
அடித்தட்டு, நடுத்தர வாக்காளர்களைக் கவர்ந்த மொஹல்லா கிளினிக் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புற நோயாளிகளுக்குப் பெருமளவு உதவியது.
ஐந்தாண்டு கால ஆட்சியில் ஆயிரம் மொஹல்லா மருத்துவமனைகளை உருவாக்க கேஜ்ரிவால் இலக்கு நிர்ணயித்திருந்தார். ஆனால் 5 ஆண்டுகளில் பாதியளவு மட்டுமே மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் நாள்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்குத் தேவையான மேல் சிகிச்சை மற்றும் அதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் டெல்லி மக்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மெஹால்லா மருத்துவமனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.