மதுரையில் வைகை ஆற்றின் ஓரம் தூங்கிய வெளியூர் தொழிலாளர்கள் 3 பேர் கட்டிடக் கலவை இயந்திர லாரி சக்கரத்தில் சிக்கி, உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்கும் வகையிலும், ஆற்றின் இருபுறத்திலும் சாலை அமைக்கவும் பக்கவாட்டுச் சுவர் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணியில் மதுரை, சென்னை, சேலம் உட்பட வெளியூர் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மதுரையில் தங்கிப் பணி புரிகின்றனர்.
மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று சேலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (26), பெரியசாமி (32), சென்னை பாபு (28) உள்ளிட் டோர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மூவரும் உழைப்பின் களைப்பால் இரவு ஓபுளாபடித்துறை அருகே வைகை ஆற்றின் ஓரம் தூங்கினர்.
இந்நிலையில், இன்று (பிப்.6) அதிகாலை கட்டுமானப் பணியில் ஈடுபடும் சிமெண்ட கலவை இயந்திர லாரி ஒன்று ஆற்றுக்குள் சென்றது. ரிவர்ஸ் சென்ற அந்த லாரி ஆற்றின் ஓரமாகத் தூங்கிய தொழிலாளர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் மூவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றித் தகவல் அறிந்த மதிச்சியம் போலீஸார் மூவரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தவறவிடாதீர்