பொன்முடி: கோப்புப்படம் 
தமிழகம்

பாஜக பக்கம் சாயும் ரஜினிகாந்த்: பொன்முடி விமர்சனம்

செய்திப்பிரிவு

பாஜக பக்கம் ரஜினி சாய்ந்து கொண்டிருப்பதற்கு அவருடைய பேச்சு ஒரு எடுத்துக்காட்டு என, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.5) தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காக போராட்டங்களைத் தூண்டி விடுகின்றன. இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினி பேச்சு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பொன்முடி, "இந்தியா முழுவதும் அனைத்துக் கட்சித் தரப்பினரும், அனைத்து மதத்தினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் சொன்னதைப் போல ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அரசியல் சூழல்கள் குறித்து ரஜினி தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதுதான் உண்மை. அவர் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

ரஜினி சொல்வது உண்மையல்ல. ரஜினி இதனைப் புரிந்துகொண்டு தன் கருத்தை திருத்திக் கொள்வார் என நான் நம்புகிறேன்" என்றார்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினையென்றால் தான் குரல் கொடுப்பேன் என ரஜினி கூறியிருப்பது குறித்து பதிலளித்த பொன்முடி, "எல்லாம் சொல்வதுதான். பாமக நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை ஆதரித்து விட்டு, தற்போது தான் தொப்பி அணியாத முஸ்லிம் என்கிறார் ராமதாஸ்.

இச்சட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? அதற்கெல்லாம் என்ன சொல்கிறார் ரஜினி? பாஜகவும் சங் பரிவாரங்களும் மதவெறியைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயத்தைத் தேடுகின்றனர் என்பதுதான் உண்மை. அதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் தான் இவை. இதற்கு இப்போது என்ன தேவை? மதவெறியைத் தூண்டி விடும் இச்சட்டத்தை ஆதரிப்பது தவறான முடிவு" என பொன்முடி கூறினார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT