ரஜினி சரியாகப் பேசியிருக்கிறார் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.5) தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காக போராட்டஙக்ளைத் தூண்டி விடுகின்றன. இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினி பேச்சு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, "ரஜினிகாந்த் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர், எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் குடியுரிமை பறிக்கப்படாது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
மாறாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளிலிருந்து மதரீதியாக வஞ்சிக்கப்பட்ட அந்நாடுகளின் சிறுபான்மையினர் சில ஆயிரம் பேருக்கு குடியுரிமை தரப்பட்டிருக்கிறது. யாரின் குடியுரிமையும் பறிக்கப்படவில்லை. பிரிவினைக்கு முந்தைய நிலைமையைக் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் வாயிலாக மேற்கொள்கின்றனர். இதனை ரஜினிகாந்த் சரியாகப் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார். இது பாராட்டுக்குரிய விஷயம்" என ஹெச்.ராஜா தெரிவித்தார்.
தவறவிடாதீர்!