தமிழகம்

சிவகங்கையில் அரசு பேருந்து மீது டீசல், எரிவாயு டேங்கர் லாரிகள் அடுத்தடுத்து மோதல்: 20 பேர் காயம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு பேருந்து மீது டீசல், எரிவாயு டேங்கர் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் சாலையில் டீசல் ஓடியது.

மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை எரிவாயு மற்றும் டீசல் டேங்கர் லாரிகள் அடுத்தடுத்து வந்தன. திருமாஞ்சோலையை அடுத்து செம்பூர் என்ற இடத்தில் வந்தபோது, டீசல் டேங்கர் லாரி, எரிவாயு டேங்கர் லாரியை முந்த முற்பட்டது.

அப்போது சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது டீசல் டேங்கர் லாரி மோதியது. தொடர்ந்து எரிவாயு லாரியும் பேருந்தில் மோதியது. இதில் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டார். அவருடன் சேர்த்து பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

மேலும் டீசல் டேங்கர் லாரி ஓட்டுநரின் கால் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. அங்கிருந்தோர் காயமடைந்தோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டீசலும் கசிந்து சாலையில் ஓடியது. தகவலறிந்து வந்த பூவந்தி போலீஸார், சிவகங்கை தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, போக்குவரத்தை சீர்செய்தனர்.

SCROLL FOR NEXT