

மசினகுடி: பொக்காபுரம் சாலையில் வந்த ஸ்கூட்டரை காட்டு யானை தட்டிவிட்டு, பெண்ணை தாக்கியது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், மசினகுடியை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் மனைவி சரசு(58). இவர், தபால் துறையில் தற்காலிக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று மாலை பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு, ஸ்கூட்டரில் மசினகுடிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை, இவர்கள் வந்த ஸ்கூட்டரை துதிக்கையால் தட்டி உள்ளது. அப்போது, ஸ்கூட்டரை சாலையில் போட்டு விட்டு, இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்ற யானை, சரசை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
யானை தள்ளியதில் கீழே விழுந்து இரண்டு கை முட்டியிலும் வெளிக்காயம் மற்றும் உடலில் வலி இருப்பதாக கூறியதால் வனத்துறையினர் அவரை மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பின் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.