தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் எந்தெந்தக் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது, தற்போது களத்தில் முந்துவது யார் என்பதை சற்றே விரிவாகப் பார்க்கலாம். நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக மாதேஸ்வரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அதிமுக சார்பாக எஸ்.தமிழ்மணி, பாஜக சார்பாக கே.பி.ராமலிங்கம் மற்றும் நாதக சார்பாக கனிமொழி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்குத் தனியாக வாக்கு வங்கி இருப்பது அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும். அதேபோல், அதிமுகவுக்கும் இங்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அவர்களும் ’டஃப் ஃபைட்’ கொடுப்பார்கள். ஆகவே,தொகுதியில் ’திமுக - அதிமுக’ இடையே கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பாஜக மற்றும் நாதக கட்சிகளுக்கு இருக்கக் கூடிய வாக்குகள் அவர்களுக்கு சாதகமாகவே கிடைக்கும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறன. எனினும், இங்கு திமுக கூட்டணி சற்றே முன்னிலையில் இருப்பதாகவே களம் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக பிரகாஷ், அதிமுக சார்பாக ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணியில் உள்ள தமாகா சார்பாக விஜயகுமார் மற்றும் நாதக சார்பாக மு.கார்மேகன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரைக் கட்சியின் கட்டமைப்பு மற்றும் தீவிரமான பரப்புரை திமுகவுக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தை அதிமுகவும், மூன்றாவது இடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பிடிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை சிபிஐ சார்பாக சுப்புராயன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக அருணாச்சலம், பாஜக சார்பாக முருகானந்தம், நாதக சார்பாக மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் பிரதான வேட்பாளராக உள்ளனர். திருப்பூரில் சிபிஐ கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனால், கடந்த முறை எழுந்த அதிருப்தியைக் கடந்து அவர்களுக்கு ஆதரவாகவே களம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், பிற கட்சிகளும் இங்கு தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர்.அதனால், நிலவரம் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் யார் வெற்றி பெற்றாலும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பொள்ளாச்சி :பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக ஈஸ்வரசாமி, அதிமுக சார்பாக கார்த்திகேயன், பாஜக சார்பாக வசந்தராஜன் மற்றும் நாதக சார்பாக மருத்துவர் நா.சுரேஷ்குமார் ஆகியோர் முக்கியமான வேட்பாளராக களத்தில் உள்ளனர். திமுகவுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. மேலும் இந்தத் தொகுதியில் கடந்தமுறை வெற்றிபெற்றதால், அதைத் தக்கவைத்துக் கொள்ள திமுக தீவிரமாகக் களமாடி வருகிறது. ஆனால், திமுகவின் சிட்டிங் எம்.பி., மீதான அதிருப்தியும், தங்கள் கட்சியின் தனித்த செல்வாக்கும் உதவும் என அதிமுக நம்புகிறது. இவை தவிர, இந்தத் தொகுதியில் பிரதமர் மோடியைப் பிரதானப்படுத்தி பாஜக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தத் தொகுதியில் ’திமுக-அதிமுக’ இடையே பிரதான போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரைத் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் களத்தில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக நெல்லை முபாரக் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக திலகபாமா போட்டியிடுகிறார். தவிர நாம் தமிழர் கட்சி சார்பாக கைலைராஜன் துரைராஜன் ஆகியோர் களத்தில் முக்கியமான வேட்பாளராக இருக்கின்றனர்.
திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தவிர, திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் களத்தில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இந்தப் பலம் சிபிஐ வேட்பாளருக்கு சாதகமாக உள்ளதால் தற்போதைய நிலவரப்படி இந்தக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் இருக்கிறார். பாமக கட்சிக்கு இங்கு வாக்கு வங்கி பெரிதாக இல்லாததால் அக்கட்சிக்கு இங்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்னும் தகவல் தான் சொல்லப்படுகிறது.
சேலம்: சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக செல்வ கணபதி , அதிமுக சார்பாக விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக கட்சி சார்பாக ந. அண்ணாதுரை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக க.மனோஜ்குமார் ஆகியோர் களத்தில் முக்கியமான வேட்பாளராக இருக்கின்றனர். அதிமுக சார்பாக எம்பியாக போட்டியிட்டு செல்வகணபதி வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது திமுக சார்பாக சேலத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இங்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது. அதனால், இந்தத் தொகுதியில் திமுக சற்றே முன்னிலையில் உள்ளது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. ஒரு தொகுதி மட்டுமே திமுக வசமுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊர் என்பதால் அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. ஆகவே, ’அதிமுக-திமுக’ இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும், சேலத்தில் திமுக முன்னிலையில் இருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள பிற தொகுதி நிலவரம்:
தருமபுரி: சமநிலைக் களத்தில் முந்துவாரா சவுமியா அன்புமணி? - தருமபுரி தொகுதி நிலவர அலசல்
கோவை :அண்ணாமலைக்கான இடம் எது? - கோவை தொகுதி கள நிலவர அலசல்
கரூர் : ஜோதிமணிக்கு சாதகமா, பாதகமா? - கரூர் தொகுதி கள நிலவர அலசல்
நீலகிரி: சிட்டிங் எம்.பி Vs மத்திய அமைச்சர் - நீலகிரி தொகுதியில் முந்துவது யார்?
திருச்சி: திருச்சி களத்தில் துரை வைகோ பலம், பலவீனம் என்ன? - தொகுதி நிலவர அலசல்