Published : 13 Apr 2024 09:35 PM
Last Updated : 13 Apr 2024 09:35 PM

சமநிலைக் களத்தில் முந்துவாரா சவுமியா அன்புமணி? - தருமபுரி தொகுதி நிலவர அலசல்

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா நேரடியாகப் போட்டியிடுவதால் ’ஸ்டார் தொகுதி’ என்னும் அந்தஸ்தை தருமபுரி தொகுதி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் திமுக சார்பாக ஆ.மணி, அதிமுகவில் டாக்டர்.அசோகன், பாஜக கூட்டணியில் பாமக சார்பாக சவுமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர்.அபிநயா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

2024 தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - தருமபுரியில் திமுக வேட்பாளர் அறியப்படாதவராக இருந்தாலும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு அங்கு நல்ல வாக்கு வங்கி இருப்பதால் திமுக களத்தில் பிரதான கட்சியாகவுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதியில் தருமபுரியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த பாமக இணைந்து 5 தொகுதிகளில் வென்றுள்ளது . ஆகவே, அதிமுக கட்சிக்கும் இங்கு தனிப்பட்ட முறையில் வாக்கு வங்கி இருக்கிறது. அதனை நம்பி அக்கட்சி வேட்பாளர் அசோகன் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், பாமகவுக்கும் தருமபுரியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. பாமக தலைவர் அன்புமணி இந்தத் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சவுமியா அன்புமணி பிரபலமான வேட்பாளராக இருக்கிறார். திமுக வேட்பாளர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அதிமுக வேட்பாளர் தேர்தலுக்கு முற்றிலும் புதியவர். ஆகவே, இப்படியாக திமுக, அதிமுக பிரபலமில்லாதவர்களாக தெரிந்தாலும், அக்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கட்டமைப்புப் பலமாக இருப்பதால் தருமபுரி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

திமுக நிலை என்ன? - கடந்த முறை இந்தத் தொகுதியில் வென்ற செந்தில்குமார் சில முக்கியமான வேலைகளை செய்துள்ளார். எனினும், அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையானதும், கட்சியில் அடிமட்ட நிர்வாகிகளுடன் நெருங்கிப் பழகாததும் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. ஆகவே, அவருக்குப் பதிலாக ஆ.மணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் தொகுதியில் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. இப்போதுதான் களத்துக்கு வந்துள்ளார். எனவே, கட்சி மற்றும், கூட்டணி பலத்தை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

குறிப்பாக, எந்தக் காரணத்துக்காகவும் தருமபுரி தொகுதியை இழந்து விடக்கூடாது என முனைப்பு காட்டிவருகிறார் தருமபுரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதனால், திமுக நிர்வாகிகளையும், கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் விரட்டி வேலை வாங்கி வருகிறார்.

அதிமுக நிலை என்ன? - அதிமுக சார்பாக அசோகன் களத்தில் உள்ளார். இவரும் புதுமுகம்தான். எனினும் அதிமுகவுக்கு இருக்கும் தனிப்பட்ட வாக்கு வங்கியை நம்பி களத்தில் இருக்கிறார். அதேபோல், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 3 இடங்களைக் கைப்பற்றி தருமபுரி அதிமுகவின் கோட்டை என நிரூபித்தது. இந்த முறையும் அந்தப் பெருமையை நிலைநிறுத்திக் கொள்ள இரவு, பகல் பாராமல் தொகுதி முழுக்கப் பணியாற்றி வருகிறார் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன்.

பாமக நிலை என்ன? - முன்பு, ’அதிமுக - திமுக’ இடையேதான் போட்டி எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால், சவுமியா அறிவிக்கப்பட்ட பின்னர் தருமபுரி களத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சாதி, மதம் எனப் பார்க்காமல் பாமகவின் பெண் வேட்பாளரான சவுமியா அன்புமணிக்கு வாய்ப்பு தாருங்கள். அவர் ஐநா சபை வரை சென்று பெண் உரிமை பற்றிப் பேசியவர் எனப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைவர் மனைவி என்பதால் அவர் வெல்ல வைக்கக் கட்சி தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிலை! - விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவரான அபிநயா நாம் தமிழர் கட்சி சார்பாகக் களமிறங்கியுள்ளார். வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் பெரிதாகக் களத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. எனினும், நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வங்கி பதிவாகும் என சொல்லப்படுகிறது.

தொகுதி பிரச்சினைகள் என்ன? - தருமபுரி தொகுதியில் பெரியளவில் பொருளாதார வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படவில்லை. விவசாயம்தான் அங்கு பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், தண்ணீர் சேமிப்புக்கான ஆதாரம் ஏதுமில்லாததால், மழைக் காலத்தில் மட்டும் விவசாயம் நடக்கும். அதன்பின் மற்ற மாவட்டம், மாநிலத்துக்கு வேலைக்குத் தருமபுரி மக்கள் சென்றுவிடுகின்றனர். எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தருமபுரியில் ’சிப்காட்’ அமைக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை.

அதேபோல், தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முன்னெடுக்கப்பட்ட சிறிய பாசன திட்டங்கள் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. தவிர, ஒகேனக்கல் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆகவே, வீணாகும் தண்ணீரைத் தருமபுரிக்குக் கொண்டுவர திட்டம் கோரப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளத்தில் உள்ள ஒகேனக்கல் நீரை மேட்டில் உள்ள தருமபுரிக்குக் கொண்டுவருவது சிரமம்தான்.

ஆனால், பம்ப் மற்றும் இன்னும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு ஏரிக்கு கொண்டுவந்துவிட்டால் அது மற்ற நீர் நிலைகளுக்கு கடத்திவிடலாம். இதனால் விவசாயம் செழிக்கும். இப்படியான திட்டத்தை முதன்முதலாக முன்மொழிந்ததும் பாமகதான். ஆனால், அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தப் பிரதான கோரிக்கைகளை அமல்படுத்துவோம் என அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதி வழங்கி வருகின்றனர்.

தருமபுரி தேர்தல் களத்தைப் பொறுத்தவரை ’சவுமியா’ மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். அதேவேளையில் திமுக, அதிமுக கட்சியின் கட்டமைப்புகள் பலமாக உள்ளது. ஆகவே, தருமபுரி தொகுதியைப் பொறுத்தவரை ’திமுக - அதிமுக - பாமக’ என மூன்று கட்சிகளும் போட்டியில் சமநிலையில்தான் இருக்கிறது. இதில், யார் முந்த வாய்ப்பு என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x