Published : 13 Apr 2024 04:51 PM
Last Updated : 13 Apr 2024 04:51 PM

திருச்சி களத்தில் துரை வைகோ பலம், பலவீனம் என்ன? - தொகுதி நிலவர அலசல்

திருச்சி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையிலும் 30 ஆண்டுகளாக உள்ளூரைச் சேர்ந்தவர்களைக் கடந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைதான் ஓங்கியிருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலின் கள நிலவரம் என்ன?

போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்கள்: திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாகக் கருப்பையா, பாஜக கூட்டணியிலுள்ள அமமுக சார்பாக செந்தில்நாதன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

2019-ம் ஆண்டு தேர்தலிலும் திமுக கூட்டணியில் வெளியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெளி ஊரைச் சேர்ந்த துரை வைகோ திமுக கூட்டணியில் களமிறக்கப்பட்டுள்ளார். இங்கு ஓரளவு தொண்டர்கள் பலம் உள்ளது என மதிமுக நம்புவதால், இந்தத் தொகுதியைத் திமுகவிடம் பெற்றிருக்கிறது. மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் திருச்சி தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - கடந்த முறை பாஜக எதிர்ப்பு அலை திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், இம்முறை திருச்சியில் கடும் போட்டி இருக்கும். காரணம், அதிமுக - பாஜக கட்சிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன. குறிப்பாக, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அங்கமாக இல்லை. இதனால், திருச்சியில் கணிசமாக இருக்கும் 25% முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்காத சூழல் உருவாகும். அந்த வாக்குகள் ஓபிஎஸ் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக கூட்டணிக்கு (அமமுக) செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வாக்குகள் பிரிவது ஒருவகையில் திமுகவுக்குப் பலமாகவும் பலவீனமாக செல்ல வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணி பொறுத்தவரையிலும், துரை வைகோ சின்னம் தொடர்பாக மேடையில் பேசியது சர்ச்சையானது. இது மதிமுக - திமுக இடையே உள்ள குழப்பத்தை வெளிக்காட்டியது. இருப்பினும், உதயசூரியன் சின்னத்தில் துரை வைகோ போட்டியிடாததால் திமுகவுக்கு இருக்கும் வருத்தத்தைப் பிராதனப்படுத்தாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேரு என இரு அமைச்சர்களின் பலத்தை நிரூபித்து துரை வைகோவை வெற்றி பெறச் செய்ய தீவிரம் காட்டிவருகின்றனர். அதனால் திருச்சியில் அமைச்சர்கள் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். மற்ற மூன்று கட்சிகளும் ‘நம் தொகுதியைச் சேர்ந்தவராக துரை வைகோ இல்லை. ஆகவே, சொந்த தொகுதியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தாருங்கள்’ என்பதைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக நிலை என்ன? - அதிமுக வேட்பாளர் கருப்பையா சொந்த ஊர் கந்தர்வகோட்டை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்பி குமார் ஆகியோரின் ஆதரவுடன் அவர் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவர் கந்தர்வகோட்டையில் முந்திரி ஏற்றுமதி அதிகரிக்கப்பது, சர்வதேச விமான நிலையம் அமைக்க நிலத்தைக் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் குண்டாறு - காவிரி இணைப்புக் கிடப்பில் இருப்பது எனத் தொகுதியின் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

அமமுக நிலை என்ன? - பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் . எனவே, அத்தொகுதியில் முக்குலத்தோர் மக்கள் கணிசமாக வசிப்பதாலும், அங்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு அலை இருப்பதால் அது இவருக்குச் சாதகமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

மேலும், ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பாஜக கூட்டணி வாக்களிக்க இருப்பதும் செந்தில்நாதன் சாதகமாகவுள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை பாஜக கூட்டணியில் களம் இறங்கியுள்ளதால், வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ”திருச்சியில் ஐடி நிறுவனங்கள் அமைப்பது மற்றும் திருச்சி தொகுதியை முன்மாதிரியாக மாற்ற திட்டங்களைக் கொண்டுவருவேன்” என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நாதக நிலை என்ன? - நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு ராஜேஷ் போட்டியிடுகிறார். ஜல்லிக்கட்டு தடையின்போது இளைஞர்கள் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியதில் திருச்சியில் உள்ள கிராமப்புறம், நகர்ப்புறப் பகுதிகளில் பிரபலமானவராக இருக்கிறார். திருச்சியில் வெற்றி பெற்றால் வாசனைத் திரவிய தொழிற்சாலை, நவீனமயமாக்கப்பட்ட சந்தை போன்றவற்றை உருவாக்க வழிவகை செய்வதாகப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

திமுக கூட்டணி வியூகம் என்ன? - திருச்சி தொகுதியில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக பலம் ஓங்கியிருக்கிறது. எனவே, திமுக கட்சி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுதவிர, மதிமுக தலைவர் வைகோவும் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். மேலும், அந்தத் தொகுதியில் அன்பில் மகேஸ், நேரு என இரு அமைச்சர்கள் ஆதிக்கம் இருப்பதால் திமுகவுக்கு ஏறுமுகமாக இருக்கிறது. பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு எதிரான வாதத்தை முன்வைத்து வருகிறது திமுக. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் நோக்கத்தில் திமுக கூட்டணி தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வெளியூரைச் சேர்ந்தவர்களைத் திருச்சி மக்கள் அரியணை ஏற்றியுள்ளனர். அது இம்முறையும் பலிக்குமா? ‘திமுக - அதிமுக - அமமுக’ என மூன்று கட்சிகளுக்கு இடையே டஃப் ஃபைட் நடக்கிறது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி தொகுதியில் திமுகவின் ஆதிக்கம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும், தேர்தலில் காலம்தான் களத்தின் போக்கைத் தீர்மானிக்கும் என்பதால், திருச்சி மக்கள் யாரைத் தங்கள் எம்பியாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x