நாககுடி கிராம மக்கள் சாலை மறியல் 
தமிழகம்

கும்பகோணம் | இரு தரப்பினர் மோதல்: காவல்துறையினருடன் வாக்குவாதம்; சாலை மறியல்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை கடைத்தெருவில், மற்றொரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து, நாககுடி கிராம மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.பாபு, நாககுடி கிராமத்தில் 7-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வந்ததால், அவரை வரவேற்கும் விதமாக, பிரதானச் சாலையில் கடந்த 6 ஆம் தேதி இரவு அக்கட்சியினர் கொடி, தோரணங்களை கட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அதே சாலை ஓட்ட வாய்க்கால் அருகில் விபத்துக்குள்ளாகி 3 பேர் கிடப்பதாக, அவர்களுக்கு தகவல் வந்ததையடுத்து, அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு நாககுடியை சேர்ந்த ஒருவரும், மருத்துவக்குடி காலனித் தெருவைச் சேர்ந்த 2 பேரும், இரு சக்கர வாகனத்தில் வந்த போது, மோதிக்கொண்டதில் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

இதை அறிந்த, மருத்துவக்குடியைச் சேர்ந்தவர்கள், உருட்டுக் கட்டை, ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்கள், சாலையில் சென்றவர்களை தாக்கினர். தொடர்ந்து நாககுடி கிராமத்திற்குள் சென்று தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவாக அவர்களைப் பேசினர். இது தொடர்பாக நாககுடி கிராம மக்கள், சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையறிந்த மருத்துவக்குடி மக்கள், 7 ஆம் தேதி இரவு, காவல் நிலையம் முன்பு கூடி, நாககுடியைச் சேர்ந்தவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து, புகாரளித்தனர்.

இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவக்குடியைச் சேர்ந்தவர்கள், நாககுடி ஊருக்குள் சென்று, தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசினர்.

இதனால் ஆத்திரமடைந்த நாககுடியைச் சேர்ந்தவர், காலை நாககுடி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் பேச்சுவார்த்தைக்கு வராததால், சுமார் 300-க்கும் மேற்பட்டோர், சுவாமிமலை கடைத்தெருவில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் போலீஸார், அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-திருவையாறு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT