

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வன்முறைக்கு 3 குடும்ப உறுப்பினர்களை இழந்த பழங்குயின இளம் மருத்துவர் ஒருவர் வரும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் பிரகாஷ் குமார் கோட்டா. பழங்குடியினத்தை சேர்ந்த இளம் மருத்துவரான இவர், பஸ்தார் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதுகுறித்து பிரகாஷ் குமார் கூறியதாவது: அரசு நிர்வாகத்தால் நான் எதிர்கொண்ட அடக்குமுறைகளால் உந்தப்பட்டு தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன். தெற்கு பஸ்தாரில் உள்ள எங்கள் பகுதியில் துப்பாக்கிச்சூடு அன்றாட நிகழ்வாக உள்ளது. நாங்கள் அங்கு உயிருக்கு போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் நாங்கள் சந்திக்கும் அடக்குமுறைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனது சகோதரரை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்று கொல்ல முயன்றனர். இதில் அவர் கோமா நிலையில் உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரினேன். ஆனால் அரசு நிர்வாகம் இதுவரை செவிசாய்க்கவில்லை.
எனது தந்தையை மாவோயிஸ்ட்கள் கொன்றுவிட்டனர். எனது தாத்தாவுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. சூழ்நிலைக்கு பலியான ஒருவனாக நான் இங்கு நிற்கிறேன்.
எங்கள் பகுதியில் மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும். இவ்வாறு பிரகாஷ் குமார் கோட்டா கூறினார். 11 மக்களவைத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் ஏப்ரல் 19, 26, மே 7 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் பாஜக 9 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றன. 2014 தேர்தலில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் ஓரிடத்தில் மட்டுமே வென்றது.