இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய வாராந்திர புள்ளிவிவரத்தின்படி, மே 29, 2026 உடன் முடிந்த வாரத்தில் அதன் தங்க கையிருப்பு மதிப்பு 2.19 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
இதனால் ஆர்பிஐ தனது தங்க இருப்புகளில் ஒரு பகுதியை விற்றிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, தங்க இருப்பு அப்படியே உள்ளது என்றும், உண்மையில் அது சிறிதளவு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தங்க கையிருப்பின் சரிவானது பெரும்பாலும் மதிப்பு மாற்றங்களின் பிரதிபலிப்பேயன்றி, தங்கம் விற்கப்பட்டதால் அல்ல என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
தங்க கையிருப்புகள் அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன. மேலும் சர்வதேச சந்தை விலைகளின் அடிப்படையில் அவை ஒவ்வொரு வாரமும் மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக, மத்திய வங்கியிடம் உள்ள தங்கத்தின் அளவில் எந்த மாற்றமும் இல்லாதபோதும், உலகளாவிய தங்க விலை மற்றும் நாணய மதிப்புகளின் ஏற்ற இறக்கங்கள் இந்த மதிப்பை கணிசமாக பாதிக்கலாம்.