மும்பை: இந்திய அணிக்கு நடப்பாண்டில் ஏற்கெனவே போட்டிகள் நிறைந்த கால அட்டவணை உள்ளது. இந்நிலையில் வரும் 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பைக்கு முன்னதாக, இருதரப்பு தொடர்களில் கூடுதல் ஒருநாள் போட்டிகளை சேர்க்குமாறு பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த வகையில் இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இருதரப்பு ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இங்கிலாந்து, நியூஸிலாந்து, அயர்லாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கையை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதனால் இந்திய அணியின் போட்டி அட்டவணை இன்னும் தீவிரமாக மாறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூடுதல் போட்டிகள் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி ரீதியாகப் பெரிதும் உதவக்கூடும். ஏனெனில் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பொதுவாக அதிக ரசிகர்கள் கூட்டத்தையும், வலுவான தொலைக்காட்சிப் பார்வையாளர்களையும் ஈர்க்கும் தன்மையுடையவை.
பொதுவாக சர்வதேச டி 20 போட்டிகள் குறுகிய நேரத்தைக் கொண்டிருப்பதாலும், அதிக ரசிகர்களை ஈர்ப்பதாலும் அவைதான் மிகப்பெரிய வருவாய் ஈட்டுபவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், இந்திய அணி விளையாடும்போது நிலைமை சற்று வேறாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள்.
அவர்களது புகழின் காரணமாக, இந்தியா பங்கேற்கும் ஒருநாள் போட்டிகள் இப்போதும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டும் வகையிலேயே உள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் இந்த கோடை காலத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் மேற்கொள்ளும் வெள்ளைப்பந்து தொடருக்கான சுற்றுப்பயணத்தின் போது அயர்லாந்து சென்று விளையாட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தப் போட்டிகள் ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் நீண்டகாலப் பயணத்தில் அவர்கள் இங்கிலாந்தில் விளையாடும் கடைசித் தருணங்களில் ஒன்றாக இது இருக்கலாம். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூடுதலாக இரண்டு ஒருநாள் போட்டிகளைச் சேர்ப்பதா அல்லது சில டி20 போட்டிகளுக்குப் பதிலாக ஒருநாள் போட்டிகளை நடத்துவதா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த பயணத்தில் ஒருநாள் போட்டிகளை சேர்க்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள திட்டத்தின்படி, இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற வேண்டிய தொடர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற வேண்டிய தொடர்கள் குறித்து இன்னும் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இதன் காரணமாக, அந்த இடைவெளியில் கூடுதல் போட்டிகளில் விளையாட இந்தியா தயாராக இருக்கலாம்.
சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரை இழந்திருந்தது. இதனால் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி கூடுதல் போட்டிகளில் பங்கேற் பதில் கவனம் செலுத்தக்கூடும்.
இந்திய அணி நடப்பாண்டை நியூஸிலாந்தில் ஒரு முழுமையான சுற்றுப்பயணத்துடன் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இருப்பினும் இந்தத் பயணத்தில் கூடுதலாக இரண்டு ஒருநாள் போட்டிகளைச் சேர்க்குமாறு நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளது; இது இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப்பயணத்தை இன்னும் நீண்டதாகவும், அதிக வேலைப்பளு கொண்டதாகவும் மாற்றக்கூடும்.